வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க சட்டத்தில் இடம் கிடையாது. தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வில் அவர் இடம்பெற்றாலும் வழக்கில் இருந்து விலகுவது தான் நியாயமானதாகும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரிபந்தாமன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாஞ்சிநாதனோ, அரிபரந்தாமனோ வேறு யாராக இருந்தாலும், நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் விதமாக பேசியதாகவோ, எழுதியதாகவோ இருந்தால், அது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தெரியவந்தால், அவர் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. அது குறித்த விவரங்களை அவர்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். அவர், அரசின் தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்வார்.
நீதிபதி ஒருவர் எப்போது நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றால், அவருடைய அமர்வில் பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தினால் அப்போது நடவடிக்கை எடுக்கலாம். இந்த நிகழ்வின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மீண்டும் ஒரு நல்ல விவாதத்தை நடத்துவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனுக்கு நன்றி கூறுகிறேன். வாஞ்சிநாதன் ஊடக விவாதங்களில் தன்னை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இது கிரிமினல் கன்டெம்ப்ட் என்று பெயர். அப்படி வருகிறபோது, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதாரங்களுடன் தலைமை நீதிபதிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கலாம். அவர் அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விதிகளை மீறி 2 முறை வாஞ்சிநாதனை நேரில் அழைத்து விசாரித்தார். மேலும், வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நான் உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நான் நேரடியாக மதுரை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தை நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்கிறார். நான் அதை கடந்துசெல்ல விரும்புகிறேன். முன்னாள் நீதிபதி சந்துரு, வாஞ்சிநாதன் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரி அறிக்கை வெளியிட்டதையும் தவறு என்று கண்டிக்கிறார். அதையும் கடந்துசெல்கிறேன். என்னை பொருத்தவரை அவர் தடித்த வார்த்தைகளை பேசியதுதான் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். வழக்கறிஞர் எப்படி நீதிபதியை முறைதவறி பேசக்கூடாதோ, அதேபோல் நீதிபதியும் நடந்து கொள்ளக்கூடாது. ஆனால் வாஞ்சிநாதனை கோழை என்று சொல்வதும், அவர் ஒரு சமூக செயற்பாட்டாளரா? என கேள்வி எழுப்புவதும் சரியானது அல்ல. அப்படி வார்த்தைகள் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். அது வாஞ்சிநாதனின் மாண்பை கெடுக்கிறது.
எப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தன்னுடைய சம்பந்தப்பட்ட விவகாரம் என்று சொன்னாரோ, அப்போதே அவர் விசாரிக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் அளித்த புகார் கடிதமே, அல்லது உங்களை அவமதிக்கும் விதமான வேறு ஏதாவது விவகாரமாக இருந்தாலும் அதை நீங்கள் விசாரிக்கக்கூடாது. சவுக்கு சங்கர் விவகாரத்தில் அந்த தவறு நடைபெற்றது. நீதித்துறையில் அது ஒரு களங்கமாக நான் பார்க்கிறேன். அந்த தீர்ப்பு ஒரு களங்கமான தீர்ப்பாகும். நாளைக்கு வாஞ்சிநாதனை விசாரிக்கு அமர்வு வந்தால் அதில் ஜி.ஆர்.சுவாமிநாதன் இடம்பெறக்கூடாது. அப்படி இடம்பெறும் பட்சத்தில் அவர் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுவதாக வீடியோ காட்சி ஒன்று பரவி வருகிறது. அதில் பிராமணர் என்பதற்பாக ஒருவருக்கு, மேஜிஸ்திரேட அதிகபட்ச தண்டனை வழங்குவதாக சொலகறார். வாஞ்சிநாதன் இவர் மீது என்ன குற்றச்சாட்டை சுமத்துகிறாரோ, அதை குற்றச்சாட்டை ஜி.ஆர்.சுவாமிநாதன் அந்த மேஜிஸ்திரேட் மீது சுமத்துகிறார். அப்போது அந்த மேஜிஸ்திரேட் சாதி பார்த்தார் என்று சொல்கிறார். விபத்தை ஏற்படுத்தியவர் அந்த பிராமணர் அல்ல. அவருடைய சகோதரி. அவருக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பிராமணர் தவறாக தானே விபத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார். அதனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கலாம்.
ஜி.ஆர்.சுவாமிநாதனின் கருத்து என்பது இந்த சமூகத்தில் சாதி புரையோடி போயுள்ளது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். எச்சில் இலையில் உருலளாம் என்று சொல்கிறார். குமரி பாதிரியார் வழக்கில் கிரிப்டோ கிறிஸ்டியன் என்று வார்த்தையை பயன் படுத்துகிறார். இப்படி பேச சட்டத்தில் எங்கே இடமுள்ளது? ஜி.ஆர்.சுவாமி நாதனின் தீர்ப்புகள் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது. அப்போது விமர்சனம் எழுகிறது. மக்கள் தொகை குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் கருத்து தவறானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.