கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் டெல்லியில் உள்ள எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசியதாவது:- கரூர் கூட்டநெரிசலுக்கு விஜயின் தாமதமும், அவருடைய நடவடிக்கைகளும் மிக மிக முக்கியமான காரணம். அவர் குறித்த நேரத்திற்கு வந்திருந்தால் இந்த துயர சம்பவமே நடந்திருக்காது. இதை கட்டுப்படுத்த தவறிய முழுமையான பொறுப்பு அவருக்கு தான் இருக்கிறது. நெரிசல் மரணம் குறித்து தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல், மக்களை கைவிட்டு தனி விமானத்தில் ஓடிவந்துவிட்டார். உதவிகளை செய்த தமிழக அரசின் மீதே கொலைப்பழி போட்டார்கள். அவர்கள்தான் இந்த பிரச்சினைக்கே காரணம் என்று தவெக மிகவும் மோசமாக நடந்துகொண்டது.
அதன் தொடர்ச்சியாக துக்கம் கேட்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. அவரிடத்தில் வெறிபிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சிறு பகுதிதான். அதை ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குகின்றன. விஜயின் பிம்ப அரசியலும், இவர்கள் நடந்துகொண்டதும் மிகவும் மோசமானது என்று எந்த விசாரணை அமைப்பு விசாரித்தாலும் தெரியும்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் 3 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். அப்படி உண்மையில் நீதி நிலைநாட்ட பட்டால் விஜய் சிறைக்கு செல்ல வேண்டும். ஆதவ், புஸ்ஸி உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லாம் சிறைக்கு செல்ல வேண்டும். 41 பேரை கொன்றுவிட்டு நான் விடுதலையாகிவிட்டேன் என்று சொல்வது எப்படி நீதி வென்றதாகும். புஷ்பா 2 படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் மரணமடைந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். ஆனால் 41 பேர் மரணமடைந்த விவகாரத்தில் விஜய் கைதாகவில்லை.
தவெக மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொண்டதா? என பலரும் சந்தேகப்பட்டார்கள். அரசியல் ரீதியாக திமுக தங்களை பழிவாங்குகிறது என்று விஜய் தரப்பு சொல்லும் என்பதால், அதை நீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிட்டார்கள். விஜய் தரப்பு சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டதன் மூலமாக தங்கள் மீது எந்த பழியும் சுமத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளது.

பொதுக்கூட்டங்களை, மாநாடுகளை, மக்கள் சந்திப்புகளை எப்படி நடத்துவது என்கிற பால பாடம் தவெகவினருக்கு தெரியாது. நீங்கள் தேர்தலை சந்தித்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறீர்கள்? சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றபோதும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி 170 தொகுதிகளுக்கு மேலாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் எங்கும் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.
காரணம் பிரச்சார பயணம் எப்படி மேற்கொள்ள வேண்டும்? மக்கள் சந்திப்பை எப்படி நடத்த வேண்டும்? என்பது அரசியலில் பயிற்சி பெற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் விஜய்க்கு எதுவும் தெரியவில்லை. அவர் ஜனநாயன் படத்தின் ஷுட்டிங்கை முடித்துவிட்டு நேரடியாக அரசியலுக்கு வருகிறார். எனவே விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு கண்டிப்பாக சம்மன் வரும். அவர் கண் முன்பாக தான் தாகத்தாலும், பசியாலும் மக்கள் மயங்கி விழுந்தார்கள். சாவு வீட்டில் அரசியல் செய்யக்கூடாது. ஆனால் விஜய் அந்த அரசியலை தொடங்கி வைத்தார்.

எங்கே ஒளிவது என்று தெரியாமல் சிபிஐ விசாரணைக்கு போனார்கள். அவர்கள் விரித்த வலைக்குள் அவர்களே மாட்டிக் கொண்டார்கள். அகில இந்திய அளவில் ஒரு எதிரிக்கான வாய்ப்பை விஜய் ஏற்படுத்திவிட்டார். இனிமேல் அவர் பாஜகவின் அடிமையாக தான் இருக்க முடியும். தற்போதே அவரால் பாஜகவுக்கு எதிராக பேச முடியவில்லை. கொள்கை எதிரி என்று சொல்கிற விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்து சொல்லாதது ஏன்? நீங்கள் குரல் கொடுக்க முடியாதவர் எல்லாம் கிடையாது. 10 பக்கம் இருந்தாலும் பன்ச் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசக்கூடியவர் விஜய்.
உங்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை. உங்களுடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் அறிவு இல்லாமல் இல்லை. ஆனால் தெரிந்துகொண்டே ஏன் கள்ள மவுனம் காக்கிறார்கள். ஏன் பாஜகவும், திமுகவும் இணைந்து நடத்துகிற நாடகம் என்று சொல்லி தப்பித்துக்கொண்டார்கள் என்றால்? இவர்கள் பாஜகவின் கைகளுக்குள் மாட்டிக் கொண்டார்கள் என்பதற்கான சாட்சிதான்.

டிடிவி தினகரன், ஒபிஎஸ், பாமகவின் ஒரு அணி தங்களுடன் கூட்டணிக்கு வந்தால், தவெக எளிதாக 20 சதவீதம் வாக்குகளை தாண்டும் என்று செங்கோட்டையன் சொல்கிறார். இது ஒரு கற்பனைவாத கணக்கு ஆகும். தமிழ்நாட்டில் மக்கள் முடிவு என்பது எப்போதும் ஒரு கட்சிக்கு ஆதரவாக தான் முடியும். 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களில் உணர்ச்சி வசப்பட்ட ஒரு இளைஞர் கூட்டம் விஜய்க்கு ஆதரவாக உள்ளது. ஆனால் அதிகாரமாக மாறுமா? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் வந்தார்கள்? ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் பல தலைவர்கள் வந்தார்கள்.
ஒருங்கிணைந்த இயக்கத்திற்கும், ஒருங்கிணைக்கப்படாத இயக்கத்திற்கும் இதுதான் வித்தியாசம். அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் மறைக்கு பிறகும் திமுக தொடர்ந்து தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. அதற்கு காரணம் அக்கட்சியிடம் கட்டமைப்பு இருந்தது. மாறாக எம்ஜிஆர், மறைந்தபோது அதிமுக தடுமாறியது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இன்றுவரை அதிமுக தத்தளித்து வருகிறது. அரசியலில் தனி மனித பிம்பத்தை கட்டமைத்து நீண்ட தூரம் போக முடியாது. அரசியல் என்பது களத்திற்கு வர வேண்டும். ஆனால் அவர் வெறும் அறிக்கை அரசியல்வாதியாக உள்ளார். கமல்ஹாசனுக்கு விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால்? கமல் இவரை விட வயதானவராக உள்ளார். அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


