ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி காவல்துறை எடுத்தது போன்று உறுதியான நிலைப்பாட்டை தமிழக காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ஈரோட்டிவில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக சார்பில் டிச.18ல் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்பு நீண்ட இடைவேளையில் தவெக நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தவெக குற்றம்சாட்டுகிறது. உங்களுக்கு ஏன் அனுமதி தருவதில்லை என்றால்? உங்களுடைய நடவடிக்கை அப்படி இருக்கிறது.
கரூர் சம்பவத்தை போன்று மற்றொரு முறை ஏற்பட்டால், அது முதலமைச்சரின் பெயருக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். காவல்துறை 84 நிபந்தனைகள் விதிக்கிறது என்றால்? குடிநீர் வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? எனபன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்க கூறுவதாகும். ஆனால் ஒரு அரசியல் கட்சி இது எதையும் மேற்கொள்ளாமல் உங்கள் விஜய்… உங்கள் விஜய்… என்று பாட்டு போட்டு டான்ஸ் ஆடுவதால் வந்த வினையாகும். 70 ஆயிரம் பேர் வரும் கூட்டத்திற்கு 7 ஏக்கர் நிலத்தை கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு கூட்டத்திற்கு 7 ஏக்கர் இடம் போதுமா? எந்த வித திட்டமிடலும் இல்லாமல் பிறகு எஸ்.பி., கலெக்டரை குறை சொல்வது.

தவெக மாநாட்டிற்கு புதுச்சேரி அரசாங்கம் எப்படி செய்தது என்பதை? பெண் காவல்துறை அதிகாரி ஈஷா சிங் செய்ததை பார்த்தாலே எல்லோருக்கும் தெரியும். புதுச்சேரியில் காவல்துறை என்ன நிலைப்பாட்டை எடுத்தார்களோ, அதை நிலைப்பாட்டை தான் ஈரோட்டிலும் காவல்துறை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். காவல்துறை ஒரு முறை பாடம் படித்துவிட்டார்கள். இந்த முறை காவல்துறை எதாவது சொதப்பினால், அவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்த முதலமைச்சரே ஒரு சிலரை தூக்கி அடித்துவிடுவார். அரசுக்கு தொடர்ந்து காவல்துறையால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே ஈரோட்டில் விஜய் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்பது முறையானதுதான்.
புதுச்சேரி அரசாங்கத்தை பார்த்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் சொல்கிறார். உண்மையில் தவெகவினருக்கு தமிழக அரசு பாடம் சொல்லித்தர வேண்டும். விஜயை இந்த அளவுக்கு பேச விட்டதற்கு காரணம் தமிழக அரசுதான். விஜய் கரூரில் இருந்து ஓடிவந்தபோது கோழி அமுக்குவது போல அவரை அமுக்கி இருக்க வேண்டும். விஜய் தவிர்த்து வேறு யார் அப்படி செய்திருந்தாலும் அவர்களை தூக்கி உள்ளே வைத்திருப்பார்கள். முதலமைச்சர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் எப்.ஐ.ஆரில் அவருடைய பெயரை சேர்க்காதது தவறு.

தவெக நிகழ்ச்சிக்கு நிபந்தனைகள் விதிக்கக் கூடாது என்கிறார்கள். இதே நிபந்தனைகளுடன் தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அனுமதி வாங்குகிறார்கள். எனவே டிச.18ஆம் தேதி காவல்துறை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விஜய், தனக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் இருப்பதாக காட்டுகிறாரே தவிர அவரிடம் செயல்திட்டமோ, சித்தாந்தமோ கிடையாது. வெறும் கூட்டத்தை காட்டி, ஆடல் – பாடல் விழா நடத்துகிறார். மற்ற கட்சிகளில் எம்எல்ஏ சீட் கிடைக்காதவர்கள் விஜய் கட்சிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏன் அனைவரும் திமுகவில் சேர வரிசையாக நிற்கிறார்கள். காரணம் திமுகவிடம் உறுதியான கூட்டணி உள்ளது. விஜயை நம்பி மற்ற கட்சிகள் செல்லாததற்கு காரணம் அவரை நம்பி சென்றால் நம்மால் வெற்றி பெற முடியாது என்பதுதான். தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக – அதிமுக இடையே தான் போட்டி. வெறும் பிரச்சாரம் செய்வதும் மட்டும் அரசியல் கிடையாது. கட்சிக்கு உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். இதுபோன்று எந்த ஒரு கட்டமைப்பும் இல்லாமல் எப்படி 2வது இடத்திற்கு வருவார்கள்.

என்னை பொருத்தவரை அதிமுக இனி விஜய் மீது நேரம் செலுத்துவது வீண். அவர்கள் ஏற்கனவே ஒரு மாதத்தை இழந்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சென்று கூட்டங்களை போட்டு மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தார். ஆனால் விஜய்க்கு மக்களுடன் எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது. தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு கூட கட்சியின் தலைவரான விஜய் செல்ல மறுக்கிறார். விஜய் முதலமைச்சர் ஆக நினைக்கும்போதே மக்களை சந்திக்க மறுக்கிறார். ஒருவேளை முதலமைச்சர் ஆனால் மக்களை சந்திப்பாரா? இதை ஒரு கூட்டம் ரசிக்கிறது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் போன்ற தலைவர்கள் இப்படியா இருந்தார்கள்?
பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நிகழ்ச்சிக்கு கலைஞருக்கு அழைப்பிதழ் வைப்பார்கள். அப்போது அவர்களை ஆசிர்வதித்து அனுப்புவார். அது முதலமைச்சர், அது கட்சி தலைவர். ஆனால் மாவட்ட செயலாளர்களை கூட சந்திக்க மாட்டேன் என்று விஜய் சொல்கிறார். விஜய் மக்கள் விரும்புகிறபடி என்ன அரசியல் செய்தார்? பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தினாரா? அவர் பாஜகவை எதிர்க்காதது ஏன்? காரணம் ஒரு சில விஷயங்கள் அவருக்கு பயம். மோடி, அமித்ஷாவை அவர் விமர்சித்து பேசுவது இல்லை. இனிமேலும் பேச மாட்டார். அதனால்தான் அவரை பாஜகவின் பி டீம் என்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


