வாக்கு திருட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் மூலம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மோடி செய்த முறைகேடுகள் உலக அரங்கிற்கு சென்றடையும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது குறித்து மூத்த பத்திரிகயாளர் உமாபதி வெளியிட்டு உள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது;- இந்தியா கூட்டணிக்கட்சிகள் வாக்கு திருட்டை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். மோடி தலைமையிலான மத்திய அரசு வங்கிக் கொள்ளையர்கள் போல செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். அதேபோல் மோசடியில் தேடப்படும் அனில் அம்பானிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ரபேல் விமானங்களுக்கு உதிரி பாகம் விநியோகம் செய்யும் நபர்களாக மாற்றி உள்ளனர். இந்திய வங்கிகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை போலி நிறுவனங்கள் மீது முதலீடு செய்து அனில் அம்பானி மோசடியில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மக்கள் செல்வாக்கு இல்லாத பாஜக எப்படி அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறது என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 2024 மக்களவை தேர்லின்போது 400 இடங்களில் வெற்றி பெறுவதற்கு பாஜக திட்டம்போட்டது. கோடி மீடியாக்களில் 420 இடங்களில் பாஜக வெல்லும் என்று காசை கொடுத்து போலி கருத்துக்கணிப்புகளை நடத்தினார்கள். ஆனால் அவர்களால் 230 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இவ்வளவு இடங்கள் பாஜவுக்கு கிடைத்தது எப்படி என்று ராகுல்காந்தி தோண்ட ஆரம்பித்தார். எதிர்க்கட்சிகள் 2024 மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடர்பான தரவுகளையும் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதனை சாப்ட் காபியாக கொடுத்தால் விரைந்து மோசடிகளை கண்டுபிடித்துவிடுவார்கள் என நினைத்த தேர்தல் ஆணையம், அதனை அச்சிட்டு தாள்களில் வழங்கியது. ஒரு தொகுதிக்கு மட்டும் 7 அடி உயரத்துக்கு ஆவணங்களை வழங்கினர். அதை கடந்த 6 மாத காலமாக ஆய்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்களுரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் வென்ற நிலையில், இந்த ஒரு தொகுதியில் மட்டும் தோற்றது.
காங்கிரசுக்கு இந்த இடத்தில்தான் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தபோது மோசடிகள் நடைபெற்றது தெரியவருகிறது. வீடு, வீட்டு எண், பெயர் என எல்லாவற்றிலும் மோசடி செய்த ஒரு லட்சம் வாக்காளர்களை சேர்த்திருந்தனர். இதனை கண்டுபிடித்த உடன் கர்நாடாக மாநில தேர்தல் இணையதளத்தையே முடக்கிவிட்டனர். அடுத்து மகாராஷ்டிராவை கையில் எடுத்தபோது அங்கேயும் தேர்தல் ஆணைய இணையதளத்தை முடக்கினார்கள். தேர்தல் ஆணையம் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பதுதான் ராகுல்காந்தியின் கூற்று. உடனே அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளிக்கிறது. ராகுல்காந்தி மீது தவறு உள்ளதாக கூறி அவரை தேர்தலிலே நிற்கவிடாமல் செய்வதற்காக இதனை செய்கின்றனர்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, சின்னத்தை அவரது மருமகனுக்கு வழங்கினார்கள். அதேபோல்தான் தமிழ்நாட்டில் பாமகவை உடைத்து, ராமதாசை புறக்கணித்துவிட்டு அன்புமணிக்கு சின்னத்தை வழங்க உள்ளனர். அந்த பாணியை தான் அனைத்து இடங்களிலும் செய்கின்றனர். இதற்கு அமித்ஷா டெக்னிக் என்று சொல்கிறார்கள். தற்போது போலி வாக்காளர்களை உருவாக்கி வாக்களிக்க தொடங்கி விட்டனர். இல்லாத வீட்டிற்கு முகவரி கொடுத்து 80 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வழங்கியுள்ளது. அவர்கள் வாக்களித்து உள்ளனர். அப்போது இது எவ்வளவு பெரிய திருட்டு. இவர்களை காலி செய்ய வேண்டும் என்பதற்காக தான் தீவிரமாக எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன. இதற்கு ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்று நடைபெற்ற பேரணி உலகம் முழுவதும் போய் சேரும். அப்போது, தேர்தல் ஆணையத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாக்குகளை திருடுகிறார் என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும். இதன் மூலம் சர்வதேச அளவில் உள்ள மோடியின் பிம்பம் உடையும். தமிழ்நாட்டில் இந்த போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துள்ளன. எல்லா நாளும் அவர்களால் தப்பிக்கொள்ள முடியாது. ஒருநாள் நீதிமன்றத்தில் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.