அதிமுக – பாஜக – பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டால், தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு தேவையே இருக்காது. அது நடைபெறாமல் தடுக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனுடன், அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளதாவது:- அண்ணாமலை – தினகரன் சந்திப்பின் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி பலப்பட போவது இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடலாம். வடசென்னை படத்தில் வருவது போல தினகரன், அண்ணாமலை, நயினார், இபிஎஸ் இடையே யார், யாரை போட்டுத்தள்ளுவது, யார் வெளியில் எடுப்பது என்கிற விதமான பிரச்சினைதான் போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாமலையிடம் கேட்டால் அமித்ஷாவே சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவது தான் எங்களின் நோக்கம் என்பார். அது குறித்துதான் பேசினோம் என்பார். ஆனால் தினகரனுடன் ஒன்றரை மணி நேரம் பேசினார். கண்டிப்பாக நல்லது நடக்கும். பொங்கலின்போது சந்திப்போம் என்று கூறுவார்.
அண்ணாமலை, அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை தனியாக சென்று சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ஊடகங்களில் வெளியாகவில்லை. இது வதந்தியாக கூட இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி செய்தி வெளியாகிறது. அண்ணாமலை கட்சி தொடங்க போகிறார். அவருக்கு பிரச்சினை உள்ளது. பி.எல். சந்தோஷ் அண்ணாமலையின் வீட்டிற்கு சென்று பேசுகிறார். அவர் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பது இல்லை. தொடர்ந்து அண்ணாமலை ஏன் சர்ச்சை வலையில் இருக்கிறார். அப்படி என்றால் அவர் சர்ச்சைக்குரிய நபர் தான்.
டிடிவி தினகரனுடைய குறுகிய கால நோக்கம் என்பது எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லை. அதுவே அவருடைய நீண்ட கால இலக்கு என்பது அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவதாகும். அண்ணாமலையின் நோக்கம் என்பது தன்னுடைய மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் பதவியும் தரவில்லை. கட்சியில் முக்கியத்துவம் தரப்படாத நிலையில், பல்வேறு பிரச்சினைகளும் வருகிறது. தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். எனவே இவர்களுக்கு பொதுவான எதிரியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால் வெளியில் சொல்லும்போது என்டிஏ, அமித்ஷா என்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு ஒரு பிரச்சினையை வலுவாக கம்மியூனிகேட் செய்ய தெரியவில்லை. அண்ணாமலை இந்த அளவுக்கு பேசு பொருளாகி உள்ளதற்கு, நயினார் சரியாக கட்சியை கையாளவில்லை என்பதும் ஒரு காரணமாகும். நயினார் கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு அண்ணாமலை யார்? என்று கேள்வி கேட்க வேண்டும். நயினார் பிரச்சினை வேண்டாம் என மென்மையாக நடந்துகொள்வதுதான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.
பாஜகவின் மாநில தலைவராக 3.5 ஆண்டுகள் இருந்த அண்ணாமலையை வளர்த்துவிட்ட கட்சி மேலிடம், அவர் மீது அவசர கதியில் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களுக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போகிறார். அல்லது மாற்று அணி உருவாக்க போகிறார் என்கிற தகவல் சென்றுள்ளது. இவை எல்லாம் திமுகவை பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும். அண்ணாமலை, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற்றாலும் பெறட்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என்பதுதான் நோக்கம். அந்த புள்ளியில் அவர்கள் பேசுவது ஒன்றாகவும், செயல்திட்டம் ஒன்றாகவும் இருக்கிறது.
தினகரன், ஒபிஎஸ் இல்லாததால் அதிமுக வலுவிழந்து விட்டதாக அவர்கள் நேரேட்டிவை செட் செய்கிறார்கள். தினகரன், அண்ணாமலை போன்றவர்கள் சமீப நாட்களில் அரசு மீது பெரிய அளவில் விமர்சனங்களை வைக்கவில்லை. மாறாக அதிமுக குறித்தே பேசுகிறார்கள். அவர்களுடைய நோக்கம் என்பது அதிமுகவை வீழ்த்துவது.
அண்ணாமலை – தினகரன் சந்திப்பு நடைபெற்ற ஒன்றரை மணி நேரத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் செய்தியாளர்களிடம் சொல்லி இருப்பார்கள். எனவே மக்கள் அரசியல் எதுவும் பேசாமல் முழுக்க முழுக்க எடப்பாடியை எப்படி காயப்படுத்துவது அல்லது தேர்தலில் அவரை எப்படி தோற்கடிப்பது என்றுதான் பேசியிருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை தேவை என நினைக்க வேண்டும். ஆனால், அவர் நான் முதலமைச்சர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பொதுச்செயலாளராக இருந்து கட்சியை மட்டும் நடத்துகிறேன். ஆனால் உங்களில் யாருக்கும் கட்சியில் இடம் கிடையாது என்று நினைக்கலாம்.
அல்லது எடப்பாடி பழனிசாமியுடன் யாராவது கூட்டணி வருவார்கள். அல்லது அதிமுக, பாஜக, பாமக இணைந்து இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என நினைத்தார்கள் என்றால், அப்போது ஓபிஎஸ், தினகரனுக்கு கூட்டணியில் வேலை இருக்காது. அந்த இடம் வரை போகமல் இருப்பதற்கு என்ன என்ன வேலைகளை செய்ய வேண்டுமோ, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.