spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!

வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!

-

- Advertisement -

பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தேர்தல் ஆணைய உதவியுடன் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளது தொடர்பாக ஊடகவியலாளர் அசீப் முகமது யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- 2014ல் மக்களவைத் தேர்தலின்போது அகமதாபாத்தில் வாக்களித்த மோடி, பின்னர் செய்தியாளர்களிடம் தாமரை சின்னத்தை காண்பித்தார். இது விதிமீறல் ஆகும். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 2017-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிடுவதற்கு முன்னதாக பாஜக ஐ.டி. பிரிவு செயலாளர் அமித் மாளவியா தனது சமூக வலைதள பக்கத்தில் தேர்தல் தேதிகளை வெளியிட்டார். எப்படி அவருக்கு முன்னதாகவே தெரிந்தது? தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா? ஆளுங்கட்சிக்கு முன்கூட்டியே தகவல்களை சொல்கிறதா? இந்த நிலையில், அமித் மாளவியா தேர்தல் தேதிகளை வெளியிட்டது குறித்து, கேள்வி எழுப்பிய காங்கிரஸ் ஐ.டி. விங் செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.

2019 மக்களவை தேர்தலின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது இஸ்லாமியர்களை மறைமுகமாக குறிப்பிட்டு, அவர்கள் கரையான்கள் என்று சொன்னார். அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மறைமுகமாக பேசினார். ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 2024 தேர்தலின்போது ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்த மோடி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்து பெண்களின் தாலி அறுக்கப்பட்டு, இஸ்லாமியர்களிடம் வழங்கப்படும். உங்களிடம் 4 மாடுகள் இருந்தால் 2 மாடுகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களிடம் கொடுக்கப்படும் என்று நேரடியாக சொன்னார். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு எழுந்த உடன், பாஜக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

2023ல் தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பான வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வருகிறது. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமரால் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர் இடம்பெறுவார் என்று மாற்றம் செய்யப்பட்டது. தற்போது உள்ள ஞானேஸ்குமார், இந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு ஆதரவான ஆட்களை நியமிக்க திட்டமிட்டனர். அதற்காக மத்திய அரசின் பதவியில் அருண் கோயல் என்பவர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வுபெறுகிறார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதலை வழங்கினார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுலையில் உள்ளது.

ஞானேஸ்குமார், இதற்கு முன்னதாக உள்துறை அமைச்சகத்தில் அமித்ஷாவின் கீழ் பணிபுரிந்தவர் ஆவார். கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த ஞானேஸ்குமார் பங்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 2019ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, ராமர் கோயிலை கட்ட அமைக்கப்பட்ட டிரஸ்ட்டில் ஞானேஸ்குமாரின் பங்கு அதிகமாகும். ஞானேஸ்குமார், கட்சியில் இல்லாத ஒரு பாஜககாரராக செயல்பட்டுள்ளார். அப்படிபட்ட ஒரு நபரை தான் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக கொண்டுவரப்பட்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், அவசரமாக ஞானேஸ்குமாரை நியமிக்கக் கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது. அவர் தலைமையில் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற சில மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதற்கு ஞானேஸ்குமார் மட்டும் காரணம் கிடையாது. அவருக்கு முன்னதாக இருந்த அருண் கோயல், ராஜிவ்குமார் போன்ற எல்லோரையும் வைத்து தான் பாஜக மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. இன்றைக்கு தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்றால்? அதனுடைய செயல்பாடு மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனம் ஒருதலைபட்சமாக இருப்பது தான் காரணமாகும்.

Karnataka Elections 2023 vote

2024 மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக்கொண்டது. போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் தேர்தல் ஆணையம் 24 மணிநேரத்தில் வாக்குப்பதிவு விவரங்களை வழங்கி வந்தது. ஆனால் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கும் இன்றைய சூழலில் 11 நாட்கள் ஆனது. அப்போது தொடங்கியது இந்த கேள்வி? அடுத்த 5 மாதங்களில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதனையொட்டி தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 50 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதியாக சொல்லப்பட்டது. ஆனால் வந்த முடிவு முற்றிலும் வேறாக இருந்தது.

இந்த தேர்தல் நடைபெற்ற விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் தேர்தல்களின்போது மாலை 5 மணிக்கு மேல் அதிகபட்சமாக ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. ஆனால் மகாராஷ்டிராவில் மாலை 5 மணிக்கு மேல் கிட்டத்தட்ட 7 சதவீத வாக்குகள் பதிவாகியது. அதாவது 76 லட்சம் பேர் அந்த சமயத்தில் வாக்களித்து இருந்தனர். அப்போது சராரியாக ஒரு வாக்குச்சாவடியில் 30 முதல் 40 பேர் வரை வாக்களித்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் வாக்களித்தது உண்மை என்றால்? அதற்கான சிசிடிவி காட்சிகளை தர வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்கிறார். கிட்டத்தட்ட 97 ஆயிரம் வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளையும், வீடியோவை ஒப்படைக்க வேண்டியது தானே. ஆனால் அதனை தர மறுத்தது உடன், 45 நாட்களுக்கு மேல் சிசிடிவி பதிவுகளை அழித்துவிட புதிய சட்டம் கொண்டுவந்தனர்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

மகாராஷ்டிராவில் அந்த 76 லட்சம் பேர்தான் தேர்தல் முடிவுகளை மாற்றினார்கள். அவர்கள் யார் என்றால்? அதற்கான விடையை தான் ராகுல்காந்தி சொல்லியுள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர், 4 மாநிலத்தில் வாக்களிப்பார். ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள் வசிக்கின்றனர். தந்தையின் பெயர் என்பதற்கு ஏ,பி,சி,டி என போடப்பட்டவர்கள். புகைப்படம் இல்லாத வாக்காளர்கள் சேர்ந்தால்தான் 76 லட்சம் பேர். அதே விஷயம் தான் ஹரியானாவிலும் நடைபெற்றது. விவசாயிகள் போராட்டம் காரணமாக மக்கள் பாஜக மீது வெறுப்பில் இருந்தனர். ஆனால் அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

ஹரியானாவில் உள்ள 44 தொகுதிகளில் மட்டும் சேம்பிள் எடுத்து பார்த்துள்ளனர். அங்கு மாலை 5 மணிக்கு மேலாக 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், தற்போது 10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளிலும் 5 மணிக்கு மேலாக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது தேர்தலையே திருடுகிறார்கள். 2014ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே அவர்கள் தேர்தல் ஆணையம் நம்முடைய ஆள் என்றுதான் நிரூபித்துள்ளனர்.

SIR நடைமுறை மூலம் பீகாரில் ஒட்டுமொத்தமாக 8 கோடி வாக்காளர்களையும் நீங்கள் யாரும் வாக்காளர் கிடையாது, முதலில் இருந்து எல்லோரும் வாக்காளராக சேருங்கள் என்று சொல்கின்றனர். அதுவும் தேர்தல் ஆணையம் சொல்கிற ஆவணங்களை கொடுத்தால்தான் வாக்காளர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேவேளையில் பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். அதில் கிட்டத்தட்ட 54 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர். பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சரின் பெயரே இல்லை.

இந்துவில் வெளியான கட்டுரையில் பிகாரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். அப்போது அவர்கள் எதை நோக்கி நகர்கின்றனர். குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்போது ஏன் அவர்கள் வாக்காளர்களாக இருக்க வேண்டும்? அப்போது அவர்களை எல்லாம் நீக்கிவிட வேண்டும். காரணம் அவர்கள் எல்லாம் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கதையை கட்டிவிட்டனர். அவர்களால் கொடுக்க முடியாத ஆவணங்களை எல்லாம் கேட்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ