பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- குறைந்தபட்சம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தற்காலிகமாக இடைமறிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்க தக்கது. போர் நிறுத்தம் என்பது எதிர்பாராத வியப்பாக வந்துள்ளது. போர் மிகவும் மோசமான நிலையை நோக்கிதான் சென்று கொண்டிருந்தது. போர் நிறுத்தத்திற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாக அமெரிக்கா, ஜி7 நாடுகள், சவுதி அரேபியா, கத்தார் போனற நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பாஜக அரசு மீது நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் இந்திய ராணுவம் என்பது அடிப்படையில் இன்று வரை மிகவும் புரொபஷனல் ஆனது. சாதி, மத பேதங்களின் அடிப்படையில் இயங்கும் ராணுவம் அல்ல. போர் வெறி கொண்டு அலைகிற ராணுவமும் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆசைகள் எதுவும் வளர்த்துக் கொள்ளாத ராணுவம்.
பாகிஸ்தான் தனது தரைப்படைகளை எல்லையை நோக்கி நகர்த்தியது. அதற்கு இந்தியாவும் பதில் தந்தாக வேண்டிய சூழல் ஏற்படுகிறபோது இழப்புகள் பல்லாயிரக்கணக்காக இருக்கும். இரு தரப்பினருக்கும் இருக்கும். அது ராணுவத்திற்கு மனஉறுதியை குலைக்கும். அணு ஆயுத விளிம்பிற்கு எடுத்துச்செல்லப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்கிற அச்சம் பொறுப்பான ராணுவ தளபதிகளுக்கு இருக்கும். பாகிஸ்தானின் ஒரே உறுதியான நிறுவனம் பாகிஸ்தான் ராணுவமாகும். அதை உடைக்க வேண்டும் என்பதுதான் ராணுவ அரசியல் அமைப்பின் இலக்காகவும் இருந்திருக்கும். அதனால்தான் இவ்வளவு தீவிரமாக இந்த போர் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்பாராத இழப்புகள் இந்தியாவுக்கு நிகழ்ந்ததும் இந்த போர் நிறுத்தம் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடும். குறப்பாக ரபேல் ஜெட் விமானம் ஒன்று, பாகிஸ்தான் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சொல்கிறது. இந்தியா அதை ஏற்கவில்லை. ரபேல் விமானங்களை தயாரிக்கிற பிரான்ஸ் நிறுவனம் ஒரு விமானம் இழக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. போர் விமானங்களில் இன்றைக்கு ரபேல்தான் நம்பர் ஒன். மேலும் சில விமானங்கள் இழக்கப்பட்டிருக்கலாம் என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், சீனா உடனான போரில் நமக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவிக்கு வராது. பாகிஸ்தானுடைய தரைப்படை நகர்வு என்பது, எப்படி செல்லும் என்கிற கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். அணு ஆயுதப் போராக மாறினால் என்ன ஆகும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்க கூடும். சில விமானங்களின் இழப்பு. இருதரப்பும் தங்களை நிரூபித்திருக்கிறது. ரபேல் வீழ்த்தியுள்ள விமானங்களில் ஒன்று சீனாவின் சின்டு வகை விமானமாகும்.
பகல்காம் தாக்குதல் நடைபெற்றது குறித்து உலக நாடுகளுக்கு ஒரு ஐயப்பாடு உள்ளது. ஏனென்றால் அந்த தாக்குதல் பற்றி கடுமையான கண்டனங்கள் எதுவும் வரவில்லை. சட்டரீதியான கண்டனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் இன்று வரை அந்த தாக்குதலுக்கு ஆதரம் உள்ளதாக இந்தியா சொல்லிக்கொள்கிறதே தவிர, சான்றுகளை உலகத்திற்கு தரவில்லை. அனைத்து உலக விசாரணை நடத்துங்கள் என்று பாகிஸ்தான் முன்வந்தது. அதை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறியலாம். ஆனால் அந்த விசாரணைக்கு இந்தியா முன்வரவில்லை.
காஷ்மீர் நிலத்திற்குள் ராணுவ வீரர்கள் உள்பட 8.5 லட்சம் பாதுகாப்பு படையினர் உள்ளனர். கடும் பாதுகாப்புக்கு மத்தியில் எப்படி ஒரு மணி நேரம் சண்டையிட்டு, 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு வந்துவிட்டு போனார்கள் என்று உலக நாடுகளிடம் கேள்வி உள்ளது. அந்த கேள்வியை எந்த பின்புலத்தில் வைத்து பார்ப்பார்கள் என்றால்? 70களில் அமெரிக்காவின் சிஐஏ அரசியல் படுகொலைகளை நிகழ்த்தியது. அதனால் இந்தியாவின் அரசியல் ராணுவப் பிரிவு இதுபோன்ற ஆபரேஷன்களை அரசியல் தேவைக்காக செய்யத் தொடங்கி விட்டதா? என்கிற எண்ணமும் உலக நாடுகளுக்கு இருக்கிறது. நீங்கள் தாக்குதலுக்கான சான்றுகள் தராதவரை இந்த போர் தொடங்கியதற்கான அடிப்படையை உலக நாடுகள் ஐய்யப்படும்.