அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் கிடைப்பதாகவும், அப்படி அண்ணாமலை செய்தால் அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

தினகரன் உடன் அண்ணாமலை சந்தித்து பேசியதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வரும் தகவல்களின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்க அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அண்ணாமலை நன்கு திட்டமிட்டு, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு செயல்பாடும், திமுகவுக்கு லாபம் தருவதாக தான் இருக்கிறது. இன்றைக்கு அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் இல்லை. அவர் எந்த பொறுப்பிலும் கிடையாது. ஆனாலும் அவர் குறித்த செய்திகள் தான் ஊடக வெளிச்சத்தில் உள்ளன. தமிழ்நாடு பாஜகவுக்கு யார் தலைவர்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்புகிறபோது கோபமடைந்த நயினார் நாகேந்திரன், தனக்கும் அண்ணாமலைக்கும் இடையே பகையை மூட்ட முயல்வதாக தெரிவித்தார். அண்ணாமலை, டிடிவி தினகரனை சென்று சந்திக்கிறார் என்றால்? யார் கொடுத்த அனுமதியின் பெயரில் அவர் சந்திக்கிறார்? பிறகு ஓபிஎஸ்-ஐயும் சந்திக்க போகிறேன் என்கிறார். எந்த அடிப்படையில் அவர் சந்தித்து பேச போகிறார்? அப்போது தினகரன், ஓபிஎஸ்-ஐ மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் இழுப்பதன் மூலம் எடப்பாடியை கோபப்படுத்த வேண்டும். அதன் மூலம் கூட்டணியை சீர்குலைக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது எப்படி மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து பேசி கூட்டணியை உடைத்தாரோ? அதேபோல் தற்போதும் ஏதாவது சித்து வேலைகளை செய்து இந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். அது அவருடைய நோக்கமாக இருக்கிறது. திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை, வெளிப் பார்வைக்கு திமுகவை எதிர்ப்பது போல தெரியும். ஆனால் அவரால் கிடைத்த உண்மையான பயன் என்ன? அதிமுக – பாஜக கூட்டணியை உடைத்தது தான் அவருடைய பலன். அதனால் பயனடைந்தவர்கள் திமுக. இன்றைக்கு பாஜக மாநில தலைவர் இருக்கும்போது, அண்ணாமலை சென்று தினகரனை சந்திக்கிறார். ஓபிஎஸ்-ஐ சந்திப்பேன் என்று தனிக்கச்சேரி தொடர்ந்து நடத்துகிறார் என்றால்? அண்ணாமலையின் முரண்பட்ட நடவடிக்கைகள் மூலம் யார் பயன் பெறுகிறார்கள் என்று பார்த்தோம் என்றால் புரிந்துவிடும். நாடாளுமன்றத் தேர்தலின் போது செய்த வேலைகளை, அண்ணாமலை இன்றைக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு வேறு ரூபத்தில் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடியை வெளிப்படையாக எதிர்க்கும் தினகரன், ஒபிஎஸ்-ஐ அண்ணாமலை சந்திப்பதன் மூலம் அவர்கள் உசுப்பேற்றுகிறார். இது கட்சியின் அனுமதியோடு செய்கிறாரா? என்பது தான் நாம் கண்டுபிடிக்க வேண்டியது.
2024 மக்களவை தேர்தலின்போது மோடி – அமித்ஷா, அண்ணாமலை மீது வைத்த அதீத நம்பிக்கை காரணமாக தமிழ்நாட்டில் தோற்று போனார்கள். என் மண் – என் மக்கள் யாத்திரை மூலம் அண்ணாமலை இரண்டு காரியங்களை செய்தார். முதலாவது கட்சியில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். இரண்டவதாக தெரிந்தோ, தெரியாமலோ திமுகவுக்கு உதவிபுரிந்தார். திமுக 40க்கு, 40 இடங்களில் வெல்ல அண்ணாமலை ஒரு முக்கிய காரணம். காரணம் அந்த யாத்திரைக்கு பின்னர்தான் பாஜக – அதிமுக கூட்டணி உடைகிறது. அதன் பிறகு தான் திமுக 40க்கு, 40 இடங்களில் வெல்கிறது. இல்லாவிட்டால் திமுகவால் அனைத்து இடங்களிலும் வென்றிருக்க முடியாது. இதை புரிந்துகொண்டு தான், அமித்ஷா மீண்டும் அதிமுக உடன் கூட்டணியை உருவாக்கினார். இந்நிலையில், என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் வேலையை அண்ணாமலை ஏன் பார்க்க வேண்டும்? நயினார் நாகேந்திரன் என்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எதற்கு இருக்க வேண்டும்? பாஜக குறித்த நேரட்டிவ் ஏன் அண்ணாமலையை சுற்றியே சுழல்கிறது? நாளைக்கு அண்ணாமலையை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால், அவர் பூஜியம் தான்.
அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தவரை, அந்த கட்சிக்கு ஒரு ஊடக வெளிச்சம் இருந்தது என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தன்னை முதன்மைப்படுத்தி போனதுடன், அதிமுகவை பலவீனப்படுத்துகிற வேலையிலும் இறங்கினார். அது ஆழமான உள்நோக்கம் கொண்டது. அது திமுகவுக்கு பலப்படுத்துகிற வேலையாகும். டெல்லியில் இருப்பவர்களுக்கு இது மிகவும் தாமதமாக புரிகிறது. பாஜக பலவீனமாக இருக்கிற ஒரு மாநிலத்தில் ஒரு தனிப்பட்ட நபரின் செயல்கள் காரணமாக உங்களுடைய பிரதான எதிரியான திமுக பலனடைகிறது என்றால்? அப்போது அண்ணாமலை யார்? அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும்போது, ஒரே நேரத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் திட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும். இதன் மூலம் பலனடைவது திமுக தான். அண்ணாமலை எந்தவித பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் பேசு பொருளாக இருந்து வருகிறார். இன்றைக்கு அதிமுகவின் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் தான் கூட்டணியின் விருப்பம். எடப்பாடியை கோபப்படுத்துவது என்பது அதிமுகவை கோபப்படுத்துவது தான்.
அண்ணாமலையை மிகவும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் மிகவும் ஆழமான அஜெண்டாவுடன் செயல்பட்டு வருகிறார். அது பாஜகவுக்கே சிக்கலாக மாறவும்தான், பி.எல்.சந்தோஷ் வந்து அவரை சந்தித்துவிட்டு போனது. பி.எல்.சந்தோஷ், அண்ணாமலையின் கட்சியின் நடவடிக்கைகளுக்கு விரோதமாக செயல்பட வேண்டாம் என்றும், ஜெகதீப் தன்கருக்கு நடந்தவற்றை மறந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவுக்குள் என்னமோ நடைபெற்று கொண்டிருக்கிறது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்று எழுந்துள்ள பேச்சுகளுக்கு நேற்று வரை வாய்ப்பு இல்லை என்று நினைத்தேன். ஆனால், தற்போது கிடைக்கும் தகவல்கள் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலும் வாய்ப்பு இல்லை என்று வருகிறது. அப்படி நடந்ததால் அரசியலில் தற்கொலைக்கு சமமானதாகும். அண்ணாமலை எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அவரை கட்சி பெரியது. மோடி, அமித்ஷாவின் உண்மையான முகத்தை அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். தன்கர் உதாரணம் அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டப் படுகிறது என்றால் புரிய வேண்டியவர்களுக்கு புரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.