அதிமுகவிடம் சீட்டு பேர வலிமையை அதிகரிக்கவே செங்கோட்டையன் மூலம் எடப்பாடியின் தலைமையை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- கட்சிக்குள் தன்னுடைய பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பு குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, பதில் கிடைத்த உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும். மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்பு செயலாளர்களில் ஒருவர் ஆவார்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வெளியேறியவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை சேர்த்துக்கொண்டு பலமான கட்சியாக தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமுகவை எதிர்கொள்ள முடியாது என்று சொல்கிறார். அப்போது, அவரிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கேட்கிறபோது, அவர் தனது தரப்பு வாதங்களை சொல்லியிருப்பார். அதன் பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கலாம். நேற்று முன்தினம் செங்கோட்டையன் சொன்னார். இன்றைக்கு திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, அவரை கட்சியில் இருந்து நீக்குகிறார்.
செங்கோட்டையன் சொல்லக்கூடிய வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் போன்றவர்கள் யாராவது எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததை மறுத்து உள்ளனரா? ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி ஒரு சந்திப்பே நடைபெறவில்லை என்று சொல்கிறார். அதிமுக பலம் இழந்துள்ளது என்று அனைத்து தரப்பினரும் சொல்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னராவது விழித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் விழித்துக் கொள்ளவில்லை. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதை எப்படி அணுக வேண்டும் என்று கூட தெரியவில்லையே.
இந்த விவகாரத்துக்கு பின்னணியில் பாஜக இருப்பது, இவர்களுக்கு இப்போதுதான் தெரியுமா? பாஜக உடன் கூட்டணி வைப்பதால் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் 40 ஆயிரம் வாக்குகளை இழப்பதாக சொன்னவர் செங்கோட்டையன். தற்போது அவர் ஏன் பாஜக பக்கம் சென்றார்? செங்கோட்டையன், பாஜக உடன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வைத்தார். அபபோது நீங்கள் இருவருமே பாஜகவினுடைய ஆட்கள் தான். எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி மாட்டிக்கொண்டார் என்று அர்த்தம்.
அமித்ஷா பேச்சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் கூட்டணி கட்சி என்றால், இவர் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை சிதறடித்தது பாஜக. ஆனால் எதாவது தலைவர் பாஜக தான் தங்களை இப்படி உடைத்தது என்று சொல்வார்களா? அதற்கு காரணம் எல்லோரும் சிக்கி உள்ளனர். பாஜக ஏன் செங்கோட்டையனை வைத்து இப்படி பேச வைக்கிறது என்றால், சில நாட்களுக்கு முன்னதாக ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட 16 கோவில் நகரங்களின் பட்டியலை கொடுத்து, அவற்றை எல்லாம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து பாஜக துரத்தப்பட்டது. அதை கைப்பற்றுவதற்காக கேட்டார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, அந்த தொகுதிகளில் எல்லாம் தாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம் எனவே அதனை ஒதுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். கூட்டணியை எல்லாம் பார்க்காதீர்கள். கட்சியை பலப்படுத்தும் வேலையை பாருங்கள் என்று அமித்ஷா சொல்கிறார். அதற்கு பிறகுதான் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். எனவே எல்லாம் திட்டமிடப்பட்டது. அவர்களின் திட்டம் என்பது எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சீட் நிறைய கிடைக்கும். பாஜகவுக்கு வாக்குகளை திருடுவது எப்படி என்று தெரியும். ஆனால் அவர்களுக்கு அதிமுக போன்ற பலமான ஒரு கட்சி தேவை.
தமிழ்நாட்டில் இன்னும் 8 மாத காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போவதாக அமித்ஷா சொல்வதாக குருமூர்த்தி சொல்கிறார். அமித்ஷா சொல்வது பூச்சாண்டி அரசியலாகும். தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடும் என்று சொல்லுங்கள் பார்ப்போம். வெற்றிடத்தில் பாஜகவுக்கு பலம் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் தமிழன் என் பக்கத்தில் நிற்கிறார் என்று சொன்னால் தமிழர்களை அவர் ஏமாளியாக நினைக்கிறார் என்று தான் அர்த்தம். அதனால்தான் பாஜகவை எதிர்த்து மக்கள் வாக்கு அளிக்கிறார்கள்.
அண்ணாமலையை எதற்காக இவர்கள் ஓரங்கட்டினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அதுமட்டும் பாஜகவினர் எல்லோருக்கும் தெரியும். பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி சிக்கி கொண்டுவிட்டார். அவர்கள் இப்படிதான் நடக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள். அவர்களின் வழிக்கு எடப்பாடி போகவில்லை என்ற உடன், அவருடைய தலைமை பலவீனப்படுத்துவேன் என்று செங்கோட்டையனை தூக்கிப்போடுகிறார்கள். நாளைக்கு செங்கோட்டையனுக்கு ஆதரவாக வேலுமணி வரலாம். அடுத்து தங்கமணி, அன்பழகன் போன்றவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.