Homeசெய்திகள்ஆவடி​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் மூட்டை கட்டித் தூக்கிச் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி

we-r-hiring

​ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பகுதியில் பழமையான முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருமுல்லைவாயில் கிராம மக்களின் மிக முக்கிய மற்றும் சக்தி வாய்ந்த வழிபாட்டுத் தலமாக விளங்கும் இந்த ஆலயத்திற்கு, தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

​இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத் திருவிழாவின் போதுதான் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஆடி மாதத் திருவிழாவின் போது இந்த உண்டியல் திறக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவிற்காக உண்டியலைத் திறக்கக் கோயில் நிர்வாகமும் பக்தர்களும் தயாராகி வந்தனர். அதாவது, ஆண்டு முழுவதும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இந்த உண்டியலில் சேர்ந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த காணிக்கை உண்டியலை அப்படியே பெயர்த்து எடுத்து, ஒரு மூட்டையில் போட்டுத் தூக்கிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

​காலை வழக்கம்போலக் கோயிலைத் திறக்க வந்த பூசாரி மற்றும் நிர்வாகத்தினர், உண்டியல் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவன் கோயில் உண்டியலை ஒரு சாக்கு மூட்டையில் போட்டு, தோளில் தூக்கிக் கொண்டு தெரு வழியாக அசால்ட்டாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டு முழுக்கச் சேர்ந்த காணிக்கை திருடு போனதால் முத்துமாரியம்மன் கோயில் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உண்டியலைத் தூக்கிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

MUST READ