ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்த மழை நீர் கால்வாய் பணிக்காக சாலை ஆக்ரமிப்பில் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் என்று ஏராளமான கட்டிடங்களை இடித்தப் பின்னர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இடையில் புதிய ராணுவ சாலையில் திமுக தொழிற்சங்க அலுவலக கட்டிடத்தின் பெரும் பகுதி, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது.
இந்த கட்டிடத்தை அகற்றாமல் ஆறு அடிக்கு மேல் சாலைக்கு வெளியே கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சில சமூக ஆர்வலர்கள் அந்த திமுக தொழிற்சங்க கட்டிடத்தையும், கால்வாய் பணி நடக்கும் சாலையையும் புகைப்படம், வீடியோ காட்சிகள் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளையும் திமுகவினையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது தற்காலிகமாக கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த கட்டிடத்திற்காக கடந்த ஆறு மாதங்களாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.