நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க – அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.
சென்னை கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
10 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் பேசத் தொடங்கிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, மூன்று ஆண்டுகளாக நகர்ப்புற மக்களின் அடிப்படை தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருக்கிறோம். இனிவரும் காலங்கள் மிக மிக முக்கியமானது. பணி தொடங்கப்பட்டு நிலுவையில் இருக்கும் திட்டங்கள் குறித்து இங்கு அதிகாரிகள் தெரிவிக்கலாம் அவற்றை உடனடியாக விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்.
அமைச்சர் பேசி கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஆங்காங்கே அமர்ந்திருந்த அதிகாரிகள் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அதனை கவனித்த அமைச்சர் நேரு அவர் கண் பார்வையில் இருந்த அதிகாரி ஒருவரை நோக்கி”நான் பேசும் போது இங்க பாருங்க.நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க. இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க” என டென்ஷனான பேசினார்.
நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அமைச்சர் அவரை விசாரிக்க தொடங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சி அதிகாரி என தெரிந்ததும் இவரைப் போல் இல்லாமல் மற்ற அதிகாரிகள் நான் பேசுவதே கவனிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்..