சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் மிக லாவகமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடப்படும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது


சென்னை அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கார்ப்பெண்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று வழக்கம் போலத் தனது பணிகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், தனது ‘ஜூப்பிட்டர்’ (Jupiter) ரக இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.
இன்று காலை தங்கராஜ் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பைக் கிடைக்காததால், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது நள்ளிரவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்கராஜின் வீட்டின் பகுதியைத் தீவிரமாக நோட்டமிடுவது கேமராவில் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் மட்டும் கீழே இறங்கி, தங்கராஜின் ஜூப்பிட்டர் பைக்கின் பூட்டை மிக லாவகமாக உடைத்து, நொடிப் பொழுதில் அதைத் திருடிச் சென்ற அதிர்ச்சி காட்சி அதில் அப்பட்டமாகத் தெரியவந்தது.
இந்தத் துணிகரத் திருட்டு சம்பவம் குறித்துத் தங்கராஜ் அயப்பாக்கம் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள அயப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ள திருடர்களின் முக அமைப்பை வைத்து, இருசக்கர வாகனத்தை அள்ளிச்சென்ற அந்த மர்ம நபர்கள் யார் எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் இதுபோன்று வீட்டின் முன் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
