நடிகர் சூரி முன்னதாக நகைச்சுவை நடிகராக தான் தனது திரை பயணத்தை தொடங்கினார். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அடி எடுத்து வைத்த சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே முத்திரை பதித்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் சூரி நடிப்பில் கருடன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் சூரியன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். காதல், துரோகம், பழிவாங்கல், வஞ்சம் என அனைத்தும் கலந்த கிராமத்து கதை களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.
இதனை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட படத்தின் வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினர். தற்போது படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன், துரை செந்தில்குமார், சசிகுமார், சூரி, படத்தின் தயாரிப்பாளர் கே குமார், ஒளிப்பதிவாளர் ஏ விமல் வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்கள் அனைவரும் கருடன் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.