இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் தான் அமரன். இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய உருவாக்கப்பட்டிருந்தது.
இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. அதாவது அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமான வசனங்கள் இருப்பதாகவும் அந்தப் படத்தில் காஷ்மீர் மக்களை எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் எஸ்டிபிஐ, ராஜ்கமல் அலுவலகத்தின் முன் போராட்டங்களை நடத்தியது. இதைத்தொடர்ந்து அமரன் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக வளத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அமரன் திரைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, “அமரன் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இந்த படம் என்னுடைய சொந்த கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல. உண்மை சம்பவத்தை தழுவி சமூக பொறுப்புடன் எடுக்கப்பட்டது. ராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே இந்த படத்தை இயக்கினேன். படத்தில் இடம்பெற்ற ‘பஜ்ரங் பாலி கி ஜெய்’ முழக்கம் அவர்களின் பிரத்தியேக முழக்கம்” என்று தெரிவித்துள்ளார்.