அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது
ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் உள்ள ஒரே வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன், தம்பிகளான வெங்கடேசன்(வயது30), சந்திரன்(வயது27),
சந்திரன் கொக்கு, குருவி சுட்டு வேலை செய்து வந்துள்ளார். வெங்கடேசன் மாமல்லபுரத்தில் தரையில் கடை விரித்து பாசிமணி வியாபாரம் செய்து வருபவர் ஆவார்.
இந்நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருவதால் இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் கடந்த 5 வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன் வெங்கடேசன், தம்பி சந்திரனிடம் உனக்கு வீட்டின் பின்புறம் உள்ள அப்பாவின் பூர்வீக இடத்தில் 2 செண்டு நிலம், 2 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். அதற்கு சந்திரன் சம்மதிக்கவில்லை என்றும், தற்போது உள்ள வீட்டில் தனக்கு பாகம் இருப்பதாகவும், தான் வெளியில் சென்று வசிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் முழு மதுபோதையில் வீட்டில் இருந்த தம்பி சந்திரன் மீண்டும் அண்ணன் வெங்கடசேனிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த வெங்கடேசனை எழுப்பி மீண்டும் தகராறு செய்த சந்திரன் தான் தயாராக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வெங்கடேசனை சுட்டதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் துடிதுடித்து இறந்தார். பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொத்திமங்கலம் நரிக்குறவர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.