சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்! 3 பள்ளிகள், தலைமைச் செயலகத்துக்கு இமெயில் ,கடிதம் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக பீதியை கிளப்பி வரும் நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையம், பிரபல தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இமெயில் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார் இந்த கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பெயரில் போலியான ஒரு இ மெயில் முகவரியை தொடங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் .
இந்தப் பள்ளிக்கு ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதே போல சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுண்ட் ராணுவ பள்ளி ஆகியவற்றுக்கு வெவ்வேறு இமெயில் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மேலும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறைக்கு மர்ம நபர் கடிதம் எழுதியுள்ளார்.
வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது.சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இப்படி தொடர்ந்து வரும் மிரட்டல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.