தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் குட்டி என்ற ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான சிவலார்குளம் விலக்கில் அமைந்துள்ள 2 ஏக்கர் 16 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக பேசி சில மாதங்களுக்கு முன்னர் முன் பணமும் கொடுத்துள்ளார்.
அதன்படி ஆலங்குளம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்று வந்தது. பத்திர எழுத்தர் அலுவலகத்தில் வைத்து ஆல்பர்ட் மைக்கேல்ராஜ், தனது மனைவி, உறவினர்கள் மற்றும் பத்திர எழுத்தர், இரு தரப்பு தரகர்கள் முன்னிலையில் ராஜலிங்கத்திடம் 1 கோடியே 28 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ராஜலிங்கம் தன்னுடன் வந்திருந்த மற்றொரு அரிசி ஆலை உரிமையாளர் துரை என்ற வேல் முருகனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஆலங்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திர பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது சார்பதிவாளர் முன்னிலையில் ராஜலிங்கம் பணமே தான் வாங்கவில்லை என்றும் ரூ. 1.28 கோடி பணத்தை தந்தால் மட்டுமே கையெழுத்து போடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர், இப்படி பொய் சொல்கிறாரே என்று அதிர்ச்சியைடைந்த ஆல்பர்ட் மைக்கேல்ராஜ் பணத்தை தந்துவிட்டேனே, ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உங்கள் பிரச்சினையை வெளியே வைத்து முடித்து விட்டு உள்ளே வாருங்கள் என சார்பதிவாளர் இரு தரப்பையும் வெளியேற்றி விட்டார். இதையடுத்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட குட்டி என்ற ராஜலிங்கம் மற்றும் அவரது கூட்டாளி துரை என்ற வேல்முருகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பணத்தை வாங்கிக் கொண்டு வாங்கவில்லை என குட்டி என்ற ராஜலிங்கம் மறுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் குட்டி இந்த ராஜலிங்கம் லிங்கதுரை ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து லிங்கதுரையின் உறவினர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் 2 அட்டைப்பெட்டி மற்றும் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.1.28 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையம் கொண்டு வந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் ஏற்கனவே தனித்தனியே அரிசி ஆலை நடத்தி வந்து அதில் ரேஷன் அரிசியை கடத்தி வரும் நபர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்று வருவதாகவும், ஆலங்குளம் – திருநெல்வேலி சாலையில்புதிதாக அரிசி ஆலை கட்டி வருவதாகவும், அதற்காக பணம் தேவைப்பட்டதால் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் பெரிய தொகை என்பதால் பணம் கொடுத்தவர்கள் வருமான வரி பிரச்சனையில் சிக்க நேரிடும் என்று எண்ணி புகார் கொடுக்க மாட்டார்கள் என்று துணிந்து மோசடி செய்ததாகவும் தெரிய வந்தது. அரிசி ஆலை உரிமையாளர்கள் மோசடி செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் – ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !