வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கிலும் கைதாகி உள்ளார். இவரது மகன் அஸ்வத்தாமனும் இதே கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாகேந்திரனின் கூட்டாளிகள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள நாகேந்திரன் உறவினர்களை தேடி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது 2 வது மகன் அஜீத் ராஜா என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ரவுடி நாகேந்திரனின் சகோதரர் ரமேஷ் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 51 கத்திகள், வாக்கி டாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாசர்பாடி போலீசார் ஆயுத தடை சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நாகேந்திரனின் சகோதரர்கள் ரவுடிகள் முருகன், ரமேஷ், மற்றும் தம்பி துரை, தமிழழகன், கிஷோர், சுகுமார், தனுஷ் ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயுத தடைச்சட்ட வழக்கில் ரவுடி நாகேந்திரனையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆனால் நாகேந்திரனின் 2வது மகன் அஜீத் ராஜா இந்த வழக்கில் தலைமறைவாகி விட்டார்.
புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த அஜீத் ராஜா போலீசாரிடம் சரண் அடைந்தார். அவரை வியாசர்பாடி போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. கைதான அஜீத் ராஜாவை ரகசிய இடத்தில் வைத்து, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.