பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அங்குசெட்டிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு(33). இவருக்கு சொந்தமான ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் நாகராஜ் மனைவி தனலட்சுமி என்பவருக்கு சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 4-ந் தேதி புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிரையம் பெற்றுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த சிற்றரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரி கிருஷ்ணன், நாகராஜ், அவரது மனைவி தனலட்சுமி, ஆவண எழுத்தர் சீனுவாசன், புதுப்பேட்டை சார் பதிவாளர் ராஜேஷ் ஆகிய 5 பேர் மீதும் போலியாக ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோதமாக பதிவு செய்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.