நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது, பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மசாஜ் சென்டர்களில் காவல்துறை சோதனை நடத்துவதற்கான நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை மீறி சென்னை மாநகர காவல் ஆணையர் செயல்பட்டிருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரின் உரிமையாளர் ஹேமா ஜுவாலினி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சட்டத்திற்குட்பட்டு, அமைதியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றில் சென்னை காவல்துறையின் பல்வேறு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலையிடுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மசாஜ் சென்டரில் சோதனை நடத்தியது, தொடர்பான வீடியோ பதிவு மற்றும் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் வழக்கு டைரி உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, காவல்துறை உரிய ஆதாரத்தை தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருத முடியாது என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விபி ஆர் மேனன், மனுதாரருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருதுவதால், வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் – 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு