மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தில் சுமார்1,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சமீபத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டி கடந்த வாரமே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதிகாரிகளின் ஆய்வுக்காக மேல்நிலைத் தொட்டியின் மூடி திறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சில நாட்களாக விநியோகமான குடிநீரில் துர்நாற்றம் வீச தொடங்கியது. புதிய தொட்டி என்பதால் பெயின்ட் வாசம் இருக்கலாம் எனக் கருதி சிலர் தொடர்ந்து தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து நாற்றம் நீடித்தது வந்துள்ளது. இதனால் சிலர் மேல்நிலை தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். தண்ணீரில் மனித மலம் மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த சோழவந்தான் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம், வட்டாட்சியர் பார்த்திபன், விஏஓ பழனி, டிஎஸ்பி ஆனந்த்ராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொட்டியின் மேல் பகுதி மூடாமல் இருப்பதால் சிறுவர்கள், யாரேனும் விளையாட்டாக இதைச் செய்திருக்கலாம் என ஆரம்ப சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், திட்டமிட்டு சமூக விரோதிகள் மலம் கலந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது உண்மையில் மனித மலம் தானா என்பதைக் கண்டறிய மாதிரி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,” என தெரிவிக்கின்றனர்.
2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்..!


