நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார், அவரது சொந்த பணத்தில், அரசு பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை கட்டித் தர வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் ரோஜா என்பவர், கணவாய்புதுார் கிராமத்தில் உள்ள, 1.26 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, காடையாம்பட்டி தாசில் தாரிடம், விண்ணப்பம் செய்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, தாசில்தார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ரோஜா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சேலம் கலெக்டர், மேட்டூர் ஆர்.டி.ஓ., காடையாம்பட்டி தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில், ரோஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா, நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியமாக அணுகி உள்ளனர் என்பதற்கு, இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவுகள், கருத்தில் கொள்ளப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தின் மாண்பும், கண்ணியமும் குறைக்கப்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கழிப்பறையை இடித்துவிட்டு, தாசில்தார் நாகூர் மீரா ஷா, தன் சொந்த செலவில், கட்டி கொடுக்க வேண்டும்.
அந்த கழிப்பறைக்கு தொடர்ச்சியாக, தண்ணீர் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, ஒரு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். கழிப்பறையை அரசு பணத்தில் கட்டக் கூடாது. கலெக்டர், மற்றொரு அதிகாரியை நியமித்து, மனுதாரர் ரோஜா மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிச. 22-ல் பேச்சுவார்த்தை : தமிழக அரசு அறிவிப்பு!


