ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் பூத் எண்.247 வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வாக்களிக்க சென்று உள்ளார்.
அப்போது வாக்குச்சாவடி பணியில் இருந்த அதிகாரிகள் மூதாட்டியை அழைத்துச் சென்று மூதாட்டிக்கு பதிலாக அதிகாரிகளே வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி மையத்தினை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மாற்றப்பட்டு, குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் வேட்பாளர் பெயர் அருகில் மை வைக்கப்பட்டிருந்ததால் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் அதிகாரிகள் மாற்றியுள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அந்த வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றியிருந்த அலுவலர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…
