பீகார் சட்ட பேரவை தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டது தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சி. மொத்தம் 238 தொகுதிகளில் இக்கட்சியை தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், பீகார் தேர்தலை முழுமையாக ரத்து செய்துவிட்டு புதிய தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பீகாரில் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் புதிய பயனாளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களுக்கு 10,000 ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், இது தேர்தல் நடத்தை விதி மீறல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீகாரில் 25-35 லட்சம் பெண் வாக்காளர்களுக்கு ரூபாய் 10,000 வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள ஜீவிக சுய உதவி குழுக்களை சேர்ந்த 1.80 லட்சம் பெண்கள் வாக்குச்சாவடிகளில் மாநில அரசால் நிறுத்தப்பட்டதாகவும் இதுவும் தேர்தல் நடத்தை விதி மீறல் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர முக்கிய கோரிக்கையாக எந்த ஒரு மாநிலத்திலும் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்ததற்காக நிவாரணத்தை பெற நீதித்துறையை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் 242 இடங்களில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை! உங்களுடைய கட்சி எத்தனை சதவீதம் வாக்குகள் பீகார் தேர்தலில் பெற்றது? என நீதிபதிகளில் கேள்வி எழுப்பியதோடு, மக்கள் உங்களை நிராகரித்தவுடன் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தர விரும்புகிறீர்கள் எனவும், நீங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஆனால் தேர்தலை ரத்து செய்யக்கோரி நீங்கள் மனு தாக்கல் செய்கிறீர்கள் எனக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உங்களுடைய கோரிக்கைகளை உயர்நீதிமன்றத்தை நாடி முன்வையுங்கள் எனக் கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தனர்.
சோலியை முடிக்கும் பிரசாந்த் கிஷோர்! விஜய்-யின் திமுக – பாஜக விமர்சனம் எடுபடுமா? அய்யநாதன் விளாசல்!


