spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

-

- Advertisement -

பழ.அதியமான்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

“மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்” என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிராக மறியல், தமிழர்களை அவமதித்த பிரதமர் நேருவுக்குக் கண்டனம். தமிழ்நாட்டு இரயில் நிலையம் ஒன்றின் பெயரைத் தமிழாக்கக் கோரியது எனக் கல்வி, பண்பாடு, மொழி என வெவ்வேறு முனைகளில் மூன்று போராட்டங்களை ஒரே சமயத்தில் தி.மு.க. ஏற்பாடு செய்தது.

we-r-hiring

1953ல் நிகழ்ந்த இப் போராட்டங்கள் தமிழர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் ஒரே நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையாகும். அப்போராட்டங்கள் அப்போதுதான் தொடங்கியிருந்த புதிய கட்சியின் நோக்கங்களையும் நிலைப்பாட்டையும் அவற்றை அடைவதற்குத் தேர்ந்தெடுத்த செயல்திட்டங்களையும் முன்னுரைப்பதாக அமைந்தன. எதிர்கால வைப்பு நிதியான கல்வி, மானம் காக்கும் பண்பாடு, அறிவு தரும் மொழி ஆகிய மூன்று முனைகளில் எதிரிகளை வீழ்த்த நிகழ்ந்த இப் போராட்டங்களையே மும்முனைப் போராட்டம் என்ற பெயருடன் தி.மு.க. தன் வரலாற்றில் பெருமையுடன் பதிவுசெய்து வைத்துள்ளது.

இராஜாஜியின் புதிய கல்வித் திட்டம். மும்முனையில் முதலாவது

‘பிள்ளைகள், பெற்றோர் தொழிலைச் செய்வதால் தீங்கொன்றும் இல்லை’ என்று தொடங்கியது இராஜாஜி முன்னுரைத்த புதிய கல்வித் திட்டத்தின் சுற்றறிக்கை, பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்குப் பிறகு இரண்டாவது முறையாகச் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இராஜாஜி 1952 ஏப்ரலில் பதவியேற்றார். பதவியேற்ற ஓராண்டு முடிவில் ஒரு புதிய கல்வித் திட்டத்தை 1953 ஏப்ரலில் அறிவித்தார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

அறிவிக்கப்பட்ட புதிய கல்வித் திட்டப்படி கிராமப்புறப் பள்ளிகள் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் என்று இரண்டு ‘ஷிப்டு’களாக இயங்கும். மாணவர்கள், 3 மணி நேரம் மட்டும் படிக்க பள்ளிக்கு வர வேண்டும், மற்ற வேளையில் அவரவர் பெற்றோர்களிடம் தொழிற் பயிற்சி பெறவும் அவர்களுக்கு உதவி புரியவும் அனுமதிக்கப்படுவார்கள். எந்த மாணவருக்காவது பெற்றோரிடம் தொழிற் பயிற்சி பெற வசதியில்லையானால் அருகில் உள்ள விவசாயி அல்லது தொழில் வல்லாரிடம் பயிற்சிக்காக ஒப்படைக்கப்படுவார்கள். வாரத்தில் ஆறு தினங்கள் பள்ளி செயல்படும்’.

‘வாரத்துக்கு 35 ஆக இருந்த பாட வேளைகள், 20 முதல் 24 பாட வேளைகளாகக் குறைக்கப்பட்டன. தாய்மொழி, ஆரம்பக் கணிதம், வரலாறு, புவியியல், சுகாதாரம், அரசியல், நல்லொழுக்கம் முதலியவை பாடத்திட்டப்படி கற்பிக்கப்படும். அந்தந்த பாடங்களுக்குரிய பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை” (‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’, பக். 255 256).

அமைச்சர் சி.சுப்பிரமணியம் தனது நூலில் கல்வி அமைச்சரையும் பொதுக்கல்வித் துறை இயக்குநரையும் கலந்துகொண்டே இப் புதிய திட்டத்தை இராஜாஜி தீட்டினார் என்று கூறுகிறார் (Hand book of Destiny, Vol.1, p.205). ஆனால், டி.எஸ்.சொக்கலிங்கத்தின் ‘காமராஜ்’, நெது,சுந்தரவடிவேலுவின் ‘நினைவலைகள்’ ஆகிய நூல்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை வைத்துப்பார்க்கும்போது, இராஜாஜி இத்திட்டத்தைத் தன்னிச்சையாகக் கல்வித் துறை இயக்குநரின் சுற்றறிக்கை மூலம் அறிவித்தார் என்றே தெரிகிறது. துறை தொடர்பானவர்களையே ஆலோசிக்காத இராஜாஜி, தம் கட்சிக்காரர்களிடம் ஆலோசனை கேட்டிருப்பார் என்று நம்ப இடமில்லை. இதைக் குறித்து கேட்டவர்களிடம், ‘தம் கொள்கைகளை வெளியிடுவதற்கு முன் ராமானுஜரும் ஆதிசங்கரரும் மற்றவர்களைக் கலந்துகொண்டா செய்தார்கள்?’ என்று பதில் கேள்வி கேட்டார். மக்கள் வாக்களிக்கும் ஜனநாயகத்தில் தாம் ஆட்சி புரிகிறோம் என்பது அவருக்கு மறந்துபோனது ஆச்சர்யம்தான்.

இராஜாஜி முன்னுரைத்த இந்தப் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பெரியார் இக்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் எனக் கண்டித்தார்.

தி.மு.க. வர்ணாசிரம கல்வித் திட்டம் என அறிவித்தது. தம்மைக் கலக்காமல் அறிவிக்கப்பட்டதால், ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரிடமும் அதிருப்தி நிலவியது.

புதிய கல்வித் திட்டத்தை அனைத்து மாவட்ட மன்றங்கள், ஜில்லா போர்டு ஐக்கிய சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் எனச் சமூகத்தில் பலரும் எதிர்த்தனர். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, இடதுசாரிகள் எனப் பல கட்சிகளும் கண்டனத் தீர்மானங்களை இயற்றின, கிளர்ச்சிகளையும் நடத்தின. ஒரே ஒரு நாள் திட்டமிடப்பட்ட மறியலைத் தொடர் மறியலாகப் பெரியார் மாற்றினார். எதற்கும் பயன் விளையாததைக் கண்ட பெரியார், ஒரு பெரிய போராட்டத்தையே அறிவித்தார்.

எதிர்ப்புகள் மிகுதியானது. அடுத்து, நிர்வாகரீதியாகப் பிரச்சனையை எதிர்கொள்ள, புதிய கல்வித் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கை தர, பாருலேக்கர், முஜீப், பி.பி.டே, எஸ்.கோவிந்தராஜுலு என்னும் நான்கு கல்வியாளர்கள் கொண்ட குழுவை இராஜாஜி அமைத்தார். அரசியல்ரீதியாகச் சமாளிக்க எம். பக்தவத்சலம், இராஜாராம் நாயுடு, ஜோதி வெங்கடாசலம் ஆகியோருக்கு அமைச்சர் பதவியையும் அவர் அளித்தார். எனினும் இராஜாஜிக்கு எதிராக 102 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டுவிட்டனர்.

இராஜாஜிக்கு எதிராக, வெளியில் பெரியாரும் திராவிட முன்னேற்றக் கழகமும், உள்ளே வரதராஜுலு நாயுடு தலைமையிலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் போராடினர். விளைவாக 08-04-1954 அன்று முதலமைச்சர் இராஜாஜி உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகினார். 1952 ஏப்ரலில் பதவிப் பொறுப்பு, 1953 ஏப்ரலில் புதிய கல்வித் திட்ட அறிவிப்பு, 1954 ஏப்ரலில் விலகல் என மூன்று ஆண்டில் இராஜாஜியின் ஆட்சி புதிய கல்வித் திட்ட அறிவிப்பால் முடிவுக்கு வந்தது.

இந்தப் புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் புதிதாய் பிறந்திருந்த கட்சியான தி.மு.க.வின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இரயில் நிலைய இந்தி எழுத்து அழிப்பு மும்முனையில் இரண்டாவது.

1950 ஆகஸ்ட் மாதம் கோவில்பட்டியில் நடந்த தி.மு.க.வின் நெல்லை மாவட்ட முதலாவது மாநாட்டில் பேசிய தி.மு.க.வின் தலைவர் அறிஞர் அண்ணா, இந்தி ஆதிக்கம் குறித்து காங்கிரசை எச்சரித்தார். செயற்குழு, இரயில் நிலையப் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிப்பதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1952ல் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் 1952 ஆகஸ்ட் 1ஆம் தேதி, இரயில் நிலைய பெயர், பலகையிலிருந்து இந்தி எழுத்துகளை அழிப்பதற்கான போராட்டத்தை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை அன்றைய பிரதமர் நேரு அறிவிலிகள் {நான்சென்ஸ்) என்றார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

இதைக் குறித்து அன்றைய தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினரான அ.கோவிந்தசாமி சட்டசபையில் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தார். ‘நம் நாட்டில் அன்னிய மொழி ஆதிக்கம் செலுத்துதல் கூடாது என்பதற்காக 1952 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பெரியார், அண்ணாதுரை அவர்கள் தலைமையில் எங்கு பார்த்தாலும் இரயில் நிலையங்களில் உள்ள இந்திப் பெயர்களை அழித்தார்கள். இதைப் பார்த்துதான் இவர் (நேரு] நான்சென்ஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்’ (தி.மு.க. வரலாறு, க.திருநாவுக்கரசு, ப. 529),

இரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் இருந்த ஆதிக்க மொழியான இந்தி எழுத்துக்களை அழித்த தி.மு.க.வினர் உள்ளிட்ட தமிழர்களை அறிவிலிகள் என்று நேரு அவமதித்ததைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் ஒன்றை அறிவித்தது.

‘கல்லக்குடி’ பெயர் மாற்றப் போராட்டம் மும்முனையில் மூன்றாவது.

தமிழ்நாட்டில் செயல்படும் மிகுதியும் தமிழர்களால் பயன்படுத்தப்படும் ஒரு இரயில் நிலையத்திற்குத் தமிழ்ப் பெயரை வைப்பதற்கான போராட்டம் இது. டால்மியாபுரம் என்ற அந்நியப் பெயரை நீக்கிவிட்டு, கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரை வைக்க நடந்த போராட்டம் இது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

இதுகுறித்து தி.மு.க.வில் இயற்றப்பட்ட தீர்மானம் பின்வருவது ‘தென்னாட்டு வளப்பத்தில் ஒன்றான சிமென்ட்டைத் தனது வளத்துக்காகப் பயன்படுத்திச் சுரண்டி வாழும் வடநாட்டு டால்மியாவானவர் சிமென்ட் விளையும் இடமான கல்லக்குடிக்கு வடநாட்டு ஆதிக்கத்தின் அறிகுறியாக ‘டால்மியாபுரம்’ என்ற பெயரை வைத்திருப்பது திராவிட மக்களை அவமானம் செய்வதாகும்.

அதை எடுத்துக் கூறி டால்மியாபுரம் என்ற பெயரை நீக்கிவிட்டு அந்த ஊரின் பெயராகிய கல்லக்குடி என்பதை வைத்தல் வேண்டுமென கிளர்ச்சி தொடங்கவும், தேவைப்பட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடவும் இம்மாநாடு தீர்மானிப்பதுடன் இதனை நடத்திச்செல்ல திருச்சி மாவட்டக் கமிட்டி ஒரு தனிக்குழுவை அமைப்பது என்றும் குழுவுக்குத் தலைவராகத் தோழர் மு.கருணாநிதியை இருக்கக் கேட்டுக்கொள்வது என்றும் இம்மாநாடு தீர்மானித்திருக்கிறது” (திராவிட நாடு, 3.5.1953, மேற்கோள் தி.மு.க. வரலாறு க.திருநாவுக்கரசு, ப.538).

போராட்டங்களும் விளைவுகளும்

புதிய கல்வித் திட்டம், நேருவிற்கு எதிர்வினை, கல்லக்குடி பெயர் வைப்பு என்ற மூன்று அம்சங்களையும் இணைத்து 1953 ஜூலையில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டன. தி.மு.க.வின் தென்னாற்காடு மாவட்ட இரண்டாவது மாநாட்டில் இப்போராட்டங்கள் குறித்து அண்ணா விளக்கிப் பேசினார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, நேரு தமிழர்களை அவமானம் அடையும்படி பேசியதற்குக் கண்டனம், கல்லக்குடி பெயர் மாற்ற மறியல் தொடர்பாக போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்தார்.

ஜூலை 13ஆம் தேதி, குலக்கல்வி எதிர்ப்புக்காக ‘ஈ.வெ.கி. சம்பத், முதலமைச்சர் இராஜாஜியின் தியாகராய நகர் பசுலுல்லா தெருவில் உள்ள வீட்டின் முன்பு மறியல் செய்வார். ஆச்சாரியார் உத்தரவு பிறப்பித்து தோழர் சம்பத்தையும் அவருடன் செல்லும் தோழர்களையும் தாக்கி ரத்தத்தைச் சிந்தவைத்து, அதையே தமது நெற்றித் திலகமாகத் தரித்துக்கொண்டு சட்டசபை சென்று கொலுவிருக்கட்டும். அவர் கொண்டுவந்து திணித்திருக்கும் கல்வித் திட்டம் இந்தியைவிட கொடுமையானது’ என்று குலக்கல்விக்கு எதிரான மறியல் குறித்து அண்ணா விரிவாகப் பேசினார்.

அண்ணாஅறிவித்தபடி 1953 ஜூலையில் நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குலக் கல்வி எதிர்ப்புக்காக 1953 ஜூலை எட்டாம் தேதி 57 பேரும், ஜூலை 9ஆம் தேதி 10 பேரும் என மொத்தம் 67 தி.மு.க. தோழர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த 67 பேரில் முன்னணித் தலைவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியும் ஒருவர். அவர்கள்மீது வழக்குகள் பதியப்பட்டன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

‘நேருவின் பேச்சுக்கு எதிராக ஜூலை 15ல் நடத்தப்படும் இரயில் நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறட்டும். இதன் செய்திகள் பிரதமர் நேருவுக்கு முன் குவியட்டும். அதன்மூலம் அவர் திராவிடத்தின் எழுச்சியை அறிந்துகொள்ள முடியும்’ என்று தி.மு.க. கருதியது. கட்சி அறிவித்தபடி, இரயில் நிறுத்தப் போராட்டம் ஜூலை 15ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. மற்ற இரண்டு போராட்டங்களும் பல வாரங்கள் நடைபெற்றன.

இரயில் நிறுத்தப் போராட்டம் தொடர்பாகவும் தியாகராய நகரில் மறியல் செய்ய ஊர்வலம் சென்றதற்காகவும் அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவரும் தண்டிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மூன்று போராட்டங்களில் நாடகக் நான்சென்ஸ் காட்சிகளை நினைவூட்டுவது போல காட்சிகள் அரங்கேறியது கல்லக்குடிப் போராட்டத்திலாகும்.

‘டால்மியாபுரம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ள பலகைமீது கல்லக்குடி என்று பெயர் அச்சடிக்கப்பட்ட தாளைத் தோழர் கருணாநிதி ஓட்டுவார். அதிகாரிகள் அதைக் கிழித்துப்போட்டால், மீண்டும் தாள் ஒட்டப்படும். ஒட்டச் செல்லும்போது கைது செய்யப்பட்டால், வேறு தோழர்கள் தொடர்ந்து அந்தக் காரியத்தைச் செய்வர்? இந்தத் திட்டத்துடன்தான் கல்லக்குடி போராட்டம் தொடங்கியது.

ஜூலை 15ஆம் தேதி காலை 9:15 மணிக்கு கல்லக்குடி இரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்தார் கலைஞர். உடனே கலைஞரும் அவருடன் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 11 மணிக்கு காரைக்குடி இராம சுப்பையா தலைமையில் 26 தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராக உள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் தந்தையார் தான் இராம சுப்பையா அவர்கள் இராம சுப்பையாவுக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் போராட்டத்தைத் தொடர்ந்தார். 11 முறை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் தையற் கலைஞர் நடராஜன் என்பவர் தன் 14 வயது மகன் தளபதியுடன் காலமானார். தொடர்ந்து சி.பி.சிற்றரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து மாத கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 35 அபராதமும் விதிக்கப்பட்டது. 1953 நவம்பர் 29ல் பலர் விடுதலையாயினர். திருச்சி சிறையில் கலைஞர் அடைக்கப்பட்டார். அவருடன் இராம சுப்பையா உட்பட 30-க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்தனர். இவ்வாறாக இந்தக் கல்லக்குடிப் போராட்டம் கலைஞரின் நினைவோடு இணைந்த ஒன்றாகிவிட்டது.

முடிவாக…

இம்மூன்று போராட்டங்களின் சாராம்சங்கள் தி.மு.க.வின் கொள்கை அடிப்படைகளாக மாறிவிட்டன. அவை இன்றும் தொடர்கின்றன. குலக்கல்வியை எதிர்த்து போராடியதில் பெரியாருடன் தி.மு.க.வும் இணைந்துகொண்டது எனலாம். முடிவில் இராஜாஜி பதவி விலகினார், தொடர்ந்து காமராசர் முதல்வரானார். அவர் குலக்கல்வித் திட்டம் எனப் பெரியார் பொருத்தமாய்ப் பெயர் சூட்டியிருந்த, புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற்றார். அது பெரியாருக்கும் தி.மு.க.விற்கும் கிடைத்த வெற்றியாகும். ஆனால் இன்று, தேசியக் கல்விக் கொள்கை என்னும் ‘மத யானை’ நாட்டில் நுழைய முனைகிறது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த இராஜாஜியின் காலத்திலாவது அதைத் திரும்பப் பெறவைக்க, கட்சிகளின் போராட்டத்தாலே முடிந்தது. இன்றைக்குக் கல்வி ஒன்றியப் பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தவர் விரும்பாத இத் தேசியக் கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறவைக்க கட்சிகளால் மட்டும் முடியுமா என்று தெரியவில்லை. மக்கள் பலமுள்ள கட்சிகளின் ஆதரவுடன் நிகழும் மக்கள் எழுச்சியால் மட்டுமே திரும்பச்செய்ய முடியும் என்று தோன்றுகிறது. இதில் ஓரளவு நீதிமன்றங்கள் உதவலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

அதுபோலவே, இரண்டாவதான தமிழர்களை அவமானப்படுத்துவதை எதிர்த்தல் எனும் போராட்டம் பண்பாட்டு அடிப்படையில் முக்கியமானது. தமிழர்களை அவமதித்தல் ஆதிக்க மனமுள்ள சிலருக்கு இன்றும் வழக்கமாக உள்ளது. ‘உட்கார் என்றால் படுக்கப் பாய் விரிக்கும்’ ஒருவித அடிமை மனநிலையிலிருந்து தலை நிமிர்ந்து நிற்க தமிழர்களைப் பண்பாட்டு அடிப்படையில் பழக்கவேண்டியுள்ளது. தலைக்கனமற்ற சுயமரியாதை உணர்ச்சியைப் பரப்புவதே ‘நான்சென்ஸ்’ என்று இனியும் தமிழரை யாரும் அழைக்காதிருக்க வழி.

மூன்றாவதான டால்மியாபுரத்தின் பெயர் நீக்கப் போராட்டம் உடனடியாக வெற்றியைப் பெற்றுவிடவில்லை. பின்னாளில் ஒன்றிய அரசில் தி.மு.க.வின் பங்கு இருந்த காலத்தில் தான் ‘கல்லக்குடி-பழங்காநத்தம்’ என்ற பெயர் மாற்றம் நிறைவாக நடைபெற்றது. மக்கள் விரும்பும் பெயரும் மக்களிடம் வழங்கும் பெயரும் என இரு பெயர்களுடன் நிலையத்தின் பெயர் அமைந்தது. ‘பெயரில் என்ன இருக்கிறது என்ற எதிர்க் குரல்கள் அன்றும் கேட்டன. பெயரில் தான் ஒன்றும் இல்லையே? உடனடியாக, மக்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டியதுதானே. மதராஸ் மாகாணம், தமிழ்நாடு என்றாக எத்தனைக் காலம் போராடவேண்டியிருந்தது. எத்தனை உயிர்களை இழக்க வேண்டியிருந்தது.

ஆக, பிறந்து நான்காண்டுகளேயாகியிருந்த தி.மு.க. தன்னை அரசியல் களத்தில் கல்வி, பண்பாடு, மொழி காக்கும் இயக்கமாக மக்கள் பேராதரவுடன் அரசியல் தளத்தில் நிலைநிறுத்திக்கொள்ள உதவியது இந்த முதல் போராட்டங்களான மும்முனைப் போராட்டங்கள்.

தன் கொள்கையின் அடித்தளத்தை வலுவாக அமைத்துக்கொள்ள தி.மு.க.விற்கு இப்போராட்டம் பயன்பட்டது. அவ்வகையில் தி.மு.க. வின் வரலாற்றில் மும்முனைப் போராட்டம் முக்கியமானது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!

MUST READ