ரூ.501 கோடி இழப்பீடு கொடுங்க! ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
அவதூறாக பேசிய புகாரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், “ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்கு தொடர்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறாக பேசிய அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அந்த பணம் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.