டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21 தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு இடைகால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதலமைச்சராக பதவியேற்றதும் மதுபான விற்பனை தொடர்பாக புதிய கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சத்யேந்திர குமார் ஜெயின் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபான கொள்கை என்றால் என்ன?
டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் 2022 ம் ஆண்டு ஜீலை மாதம் 8 ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் கொரோனா காலக்கட்டத்தில் மதுபான விற்பனையாளர்கள் ஒன்று சேர்ந்து மதுபான உரிமை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்று 2021 டிசம்பர் 18 முதல் ஜனவரி 27 வரை உரிமை கட்டணத்தில் 24.02 சதவீதம் தள்ளுபடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு 144.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அறிக்கையின் அடிப்படையில் துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
அதில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இதுவரை எவ்வித ஆதாரங்களையும் அமலாக்கத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட வில்லை.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் கன்னா, கடந்த 7 ந் தேதி விசாரணை நடத்தியபோது அமலாக்கத்துறை முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தருவதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கின் தொடக்கத்தில் 100 கோடி ரூபாய் ஊழல் என்றார்கள், தற்போது 1000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறுகிறார்கள் என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் மழுப்பலான பதிலைத் தருவதாக நீதிபதி சஞ்சய் கன்னா கூறினார்.
இந்த வழக்கில் 2021 மார்ச் 9ல் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டார். தற்போது 3 ஆண்டுகள் வரை கால தாமதம் செய்ய காரணம் என்ன? அதுவும் தேர்தல் காலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வரை கைது செய்யவேண்டிய தேவை என்ன என்று நீதிபதி சஞ்சய் கன்னா கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அமலாக்கதுறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு லோக்சபா மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
மே 3ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, “கெஜ்ரிவால் மீதான விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக ஜாமின் வழங்கப்படலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தீவிரமாக வாதித்தது. தேர்தல் பிரசாரத்திற்காக ஜாமீன் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எங்களிடம் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்து பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.ஆனால் நீதிபதிகள் அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது. ஆனால் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. எனவே இந்த காரணங்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று தங்களுடைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


