திமுக என்ற கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவால் நுழைய முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மண்டலக் கழக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு, கல்லக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கியது. இம்மாநாட்டில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, விருதுநகரில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திமுக என்ற கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவால் நுழைய முடியாது என உறுதியாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைத்து வருகிறது என கடுமையாக குற்றம்சாட்டினார். திமுக என்பது கூடிக் கலைந்து போகும் காகக் கூட்டம் அல்ல; கூடிப் பொழியும் மேகக் கூட்டம் என்றும் அவர் உவமை செய்து பேசினார்.
திமுக என்ற இயக்கத்தால் தமிழர்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றும், மாநில உரிமைகளை பாதுகாப்பதில் திமுக முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். வெற்றி என்ற செய்தி வரும் வரை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், 5 பேருடன் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி, இன்று 5 லட்சம் பேருடன் பயணித்து வருகிறது என்றும், திமுக இளைஞரணி செயலாளராகவும், துணை முதலமைச்சராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என திருச்சி சிவா புகழாரம் சூட்டினார்.


