இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு சமீப காலமாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவர்கள் இருகட்சிகளுக்குள் மோதல் போக்கு இல்லையென்று தெரிவித்தாலும், தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் வழியாகவும், ஆர்ப்பாட்டங்கள் வழியாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
அண்ணாமலை தலைவர் பதவி பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே முன்னிறுத்திக் கொள்வதாகவும் தமிழக பாஜக தலைவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து பா.ஜ.க.வை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நடந்து கொண்ட வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சிக்கான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக நேற்று இரவு அறிவித்தார்.
ஆனால் இன்று காலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அவருடைய பதவியில் தொடருவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது,’ என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பாஜகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அம்பலமாகியுள்ளது.