கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனதுரோகி, தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர்மோகன், பிடி வாரண்டை திரும்பப் பெறக்கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது எனவும் கூறினார். மேலும், சீமானின் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.