தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது அறிவிக்கப்பட்ட அரசாணைக்கும் முரண்பாடுகள் உள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பெறப்பட்ட விவசாயக் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதில் குறு விவசாயிகளின் கடன் ரூ 50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகள் ரூ 50,000 பெற்ற கடனில் 50% மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அதேபோன்று ஒரு லட்சத்திற்கு மேல் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், மற்ற பெரிய விவசாயிகளுக்கும் ஒரே சீராக வெறும் ரூ5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் இந்த அறிவிப்பை “ஏமாற்றம் அளிக்கிறது” எனக் தெரிவித்துள்ளது. தேர்தல் காலங்களில் தவெக தலைவர் விஜய் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், தற்போது ரூ50,000 என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்குப் போதிய நிவாரணமாக அமையவில்லை.
ஒரு லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் வாங்கி, வறட்சி அல்லது இயற்கை பேரிடரால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு வெறும் ரூ5,000 மட்டுமே தள்ளுபடி என்பது தங்களை அவமதிப்பது போல் உள்ளது என்று சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிலும் (Nationalised Banks) விவசாயக் கடன்களையும், நகைக்கடன்களையும் பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கிக் கடன்களை மட்டுமே அரசு கணக்கில் எடுத்துக்கொண்டதால், பிற வங்கிகளில் கடன் பெற்ற லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளனர்.
“விவசாயிகளின் கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி, முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்; அப்போதுதான் தொடர் நஷ்டத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்கள் மீள முடியும்” என்பதே விவசாய சங்கங்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் தற்போதைய அடுக்குமுறை (Slab system) தள்ளுபடி அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இயற்கைச் சீற்றங்கள், உர விலை உயர்வு, மற்றும் விளைபொருட்களுக்குப் போதிய குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) இல்லாத சூழலில், இதுபோன்ற பகுதிநேரக் கடன் தள்ளுபடிகள் விவசாயிகளின் நிரந்தரக் கடன் சுமையைக் குறைக்க உதவாது. எனவே, அரசு இந்த வரம்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“குதிரை பேரம் நடக்கவில்லை” – ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பதிலடி….
