கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இடம் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27 அன்று கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு பிறகு தமிழக காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அப்போது பணியாற்றிய டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு , மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ள நிலையில் இன்று ஆயுதப்படை டிஜிபியாக தற்போது பணியாற்றி வரும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இதற்காக சிபிஐ டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு சம்மன் அனுப்பியதாகவும், சம்மன் அடிப்படையில் அவர் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

