சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். அதனால் புறநகர் ரயில் சேவையை குறைக்க வேண்டாம் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரல், கடற்கரை முதல் அம்பத்தூர், ஆவடி , திருவள்ளூர் வழியாக அரக்கோணம் வரை செல்கின்ற ரயில் சேவை படிப்படியாக குறைந்து வருவதாக இரயில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் நாளொன்றுக்கு சுமார் 5.5 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் உள்ளூர் ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் அதனால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில் சென்னை புறநகர் ஆவடி, திருவள்ளூர் , அரக்கோணம் மார்க்கமாகவும், சென்னை முதல் கும்மிடிப்பூண்டி மார்க்கமாகவும் 56 ரயில்களை நிரந்தரமாக ரத்து செய்தனர். அவற்றை படிப்படியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் இரயில் பயணிகள் எதிர்ப்பார்த்தனர். பல கோரிக்கை மனுக்களையும் தென்னக இரயில்வே நிர்வாகத்திடம் வழங்கினார்கள். அவற்றை ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ஜனவரி 1-2025 ஆம் தேதி முதல் சென்னை முதல் ஆவடி/பட்டாபிராம் மற்றும் சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு வழித்தடங்களில் மேலும் 4 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை மாலை நேரங்களில் 20-30 நிமிடங்கள் காலதாமதமாக ரயில்களை இயக்குகின்றனர்.
இதுகுறித்து சென்னை அம்பத்தூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்கிற ரயில் பயணியிடம் பேசும் போது, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரயிலும் பட்டாபிராம் சைடிங்கில் இருந்து 9.15 புறப்படும் ரயில்களையும் ரத்து செய்துள்ளனர். அதனால் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து திருநின்றவூரை சேர்ந்த இரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பேசும்போது, கோவிட் காலத்தில் 56 ரயில்களை ரத்து செய்தனர். தற்போது மேலும் 4 ரயில்களை ரத்து செய்துள்ளனர். அதனால் பயணிகள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சரியாக அமைக்கப்படாததால் தினமும் பயணிகளுக்கு விபத்து ஏற்படுகிறது என்றார். மேலும் ரயில் நிலையத்தில் கேமராக்கள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது என்றார்.
பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்