தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 6 கேத் லேப்கள் செயல்பட்டு வருகிறது. இன்று 7வது கேத் லேப் ஓமந்துரார் பன்னோக்கு மருத்துவமனையில் துவங்கபட்டுள்ளது.
மேலும், கூடுதலாக நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மருத்துவமனைகளில் 5 கேத் லேப்கள் தொடங்கப்பட உள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அடைப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த கேத் லேப் பயன்பெறும். இந்த கேத் லேப் மூலம் சிகிச்சை பெற 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனையில் செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதற்கு 2028 ஆகும். மதுரை எய்ம்ஸ் கட்டிடம் வராமலேயே முதல் பேட்ச் மாணவர்கள் மருத்துவம் பயின்று வெளியேற உள்ளார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடிக்க தொடர்ந்து தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது , மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பரவல் இல்லை. தானாக காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டுமெனவும், ஆஃபாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது, இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்


