தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் மோடி அரசு தென்னகத்தை வஞ்சிக்கக்கூடிய வகையில் குள்ளநரி நோக்கத்தோடு தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரு மாநிலத்திலும் தேர்தல் உச்சகட்டத்தில் இருக்கிற போது அவசரக் கட்டத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. ஆனால் எங்களுடைய தலைவர் தேர்தல் வேலைகளை பார்த்துக் கொள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்.
தென்னகத்தில் இருக்கக்கூடிய மாநிலங்களில் 30% கூட தொகுதிகள் உயரவில்லை. ஆகவே மத்திய அரசு தமிழ்நாட்டை மட்டுமல்ல தென்னகத்தையே வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களுக்கு 70 சதவீதத்திற்கும் மேலாக தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். ஆனால் தென் மாநிலங்களில் 30 சதவீதம் வரை மட்டுமே தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். இதனால் வட மாநிலங்கள் மட்டுமே பயனடையும் தென் மாநிலங்கள் தொடர்ந்து பலவீனமாகும்.

தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். இந்நிலையில் தென் மாநில மக்களின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாது, உடை முதல் உணவு வரை அனைத்துமே வட மாநில மக்கள் தீர்மானிப்பதையே இந்தியா முழுவதும் செயல்படுத்துவார்கள். இது தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிப்பதற்காக அல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சிப்பதற்கான ஒரு செயல்தான்.
திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இன்று காலையில் நாமக்கல்லில் இந்த தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் மசோதா நகலினை தீயிட்டு கொளுத்தினார். அதன் தொடர்ச்சியாக நாங்கள் இப்போது அண்ணா அறிவாலயத்தில் இந்த நகலினை தீயிட்டு கொளுத்துகிறோம். தமிழ்நாடும் முழுவதும் இன்று இந்த தீ பரவிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இது இந்தியா முழுவதும் பரவும்.
எங்களுடைய திமுக தலைவருக்கு துணையாக தெலுங்கானா முதலமைச்சரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவார்கள். பிரிவினை கொள்கையை கைவிடுகிறோம். ஆனால் எங்களது நோக்கம் அப்படியே உள்ளது என அண்ணா சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று ஆர். எஸ்.பாரதி கூறினாா்.
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
