மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவே இத்தேர்தலில் அன்புமணி தரப்புக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளாா்.
சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் நிறைவடைய உள்ள சூழலில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனது மகனும் பாமக முக்கிய தலைவருமான அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு எதிராக அவர் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீப காலமாகவே அன்புமணி தரப்புக்கு எதிராக விமர்சன குரல் எழுப்பி வந்த ராமதாஸ், “துரோகம் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக்கூடாது” என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதற்கிடையில், தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இந்த அறிக்கைக்கு முன்னதாகவே, அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் எனக் கூறி ராமதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தாம் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய சமயத்தில் கூட மகன் நலம் விசாரிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியிருந்தார். அந்த மனவேதனை தற்போது வெளியான அறிக்கையிலும் தீவிரமாக பிரதிபலிக்கிறது.
“மாம்பழம் இனிக்கும் என இனி நம்ப வேண்டாம்; அதில் துரோகம் எனும் விஷம் கலந்துவிட்டது” என உவமையுடன் அவர் விமர்சித்துள்ளார். அன்புமணி தரப்புக்கு வாக்களிப்பது, “தன் தந்தையின் தலை மீது மண் தூவுவதற்கு சமம்” என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் ஒப்பீட்டில் மு.க. ஸ்டாலின் குறித்து குறிப்பிடும் ராமதாஸ், “எவ்வளவு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் தந்தை கலைஞரை இறுதி வரை கவனித்தார் ஸ்டாலின். ஆனால் எனது மகன் நான் உயிருடன் இருக்கும்போதே என்னை இல்லாதவராகக் கருதி அரசியல் செய்கிறார்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“இதற்கு மேலான அவமானம் ஒரு தகப்பனுக்கு இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், “நான் தோற்றாலும் பரவாயில்லை; ஆனால் துரோகம் வெல்லக்கூடாது” என உறுதியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “என் ரத்தமே எனக்கு விஷமாக மாறினாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பார்கள்” என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், 18 தொகுதிகளில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும், “தர்மம் வெல்லட்டும்” எனவும் அவர் தனது ஆதரவாளர்களை அழைத்துள்ளார். தேர்தல் சீட்டுகள் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தருமபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், அவரையும் நேரடியாக விமர்சித்துள்ளார். “அவர் வெற்றி பெற்றால், தருமபுரி ‘அதர்மபுரி’ ஆகிவிடும்” என கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் பரப்புரைகளை நிறைவு செய்து வருகின்றனர். இந்த சூழலில், ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தந்தை–மகன் அரசியல் மோதல் வெளிப்படையான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் வெளிப்பாடு தேர்தல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் ஒருமித்த தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்
