பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு வரும் கல்வியாண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் என்ற திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையே சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு பிரதமர் ஜன்மன் திட்டம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் உயர்கல்வியில் தேசிய அளவில் பழங்குடி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட, ஒன்றிய அளவில் உள்ள பள்ளிகளில் பழங்குடியினர் விடுதிகளை அமைப்பதன் மூலம் தரமான கல்வியை பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த செலவிலும், எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றவும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 1000 விடுதிகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் இடங்களின் விபரத்தையும் PM Gati Shakti என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழுவின் கூட்டம் 2025 மார்ச் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதில் பிஎம் ஜன்மன் திட்டதிற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்கள் தங்களின் திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (DA JGUA) திட்டம் 2024-25 முதல் 2028-29 வரையிலான காலகட்டத்தில் 1000 விடுதிகளைக் கட்ட வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தபட்டு வருகிறது.
2024ம் ஆண்டில் திட்டதிற்கு அனுமதி அளிக்கும் குழுவின் கூட்டத்தில் முதல் கட்டமாக 304 விடுதிகள் பரிந்துரைக்கப்பட்டன. 2025-26 ஆம் ஆண்டிற்கான திட்ட அனுமதி வழங்கும் குழுவின் கூட்டத்தின் போது, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, 19 மாநிலங்களிலிருந்து 419 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
அப்போது நடந்த விவாதத்தில் மாநிலம், யூனியன் பிரதேசத்தால் வழங்கப்பட்ட தரவு GATI SHAKTI போர்ட்டலுடன் பொருந்தாத திட்டம் ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படவில்லை. மாநிலங்கள் போர்ட்டலில் உள்ள தரவைப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநிலங்கள் இருப்பிடம், இணைக்கப்பட்ட பள்ளி போன்றவற்றில் ஏதேனும் மாற்றத்தை 3 நாட்களுக்குள் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.
2025-26 நிதியாண்டில் DAJGUA -ன் 2வது கட்டத்தில் 18 மாநிலங்களில் 300 விடுதிகள் கட்டுவதற்கு 1,11, 470 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு 90819.9 லட்சம் மற்றும் மாநில அரசின் பங்கு 20650.1 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே 2152 கோடி நிதியை சமகர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தர வேண்டிய நிலையில், நடப்பாண்டில் புதியதாக திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான நிதியையும் ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளதாகவும், கல்விக்கான நிதியுடன் இந்த நிதியையும் வழங்காமல் பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை ஒன்றிய அரசு தடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தாா்கள்.
தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு