காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அணை கட்ட முயலும் கர்நாடக காங்கிரஸ் அரசாக இருந்தாலும், அதனை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என அவர் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.


மறைந்த முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், மாநில துணைத்தலைவர்கள் உ.பலராமன், இதயத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நேருவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, யார் முதலமைச்சராக இருந்தாலும் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான நடைமுறை என்றும், கேரள முதலமைச்சரும் பிரதமரை சந்தித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் அதை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு இல்லை என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் காவிரி நீர்வழங்கலில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கர்நாடக காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமையிடம் எடுத்துரைப்போம் என்றும் அவர் கூறினார். அதேபோல், “குதிரை பேரம்” எங்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல் பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களையும் காங்கிரஸ் கட்சி கண்டித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 5 மாநில தேர்தல்கள் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் அவர் விமர்சித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த “காங்கிரசின் பாஜக எதிர்ப்பு பலவீனமாக உள்ளது” என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, “பாஜகவை உறுதியாக எதிர்த்து வருபவர் ராகுல் காந்திமட்டுமே” என்று கூறினார்.
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
