Homeசெய்திகள்கட்டுரைஆள விட்றா சாமி! அலறி ஓடிய ரவி! ஸ்டாலின் காட்டும் உறுதி!

ஆள விட்றா சாமி! அலறி ஓடிய ரவி! ஸ்டாலின் காட்டும் உறுதி!

-

- Advertisement -

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்ததன் மூலம் அந்த பதவி என்பது முதலமைச்சர் சொன்னது போல அது வெறும் போஸ்ட்மேன் வேலைதான் என்று துணை வேந்தர்களே உணர்த்தி விட்டார்கள் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

 

கோவையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது ஷாநவாஸ் பேசியதாவது :-  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் விழாவாக கொண்டாட வேண்டும். சென்னையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பிவிட்டுத்தான் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளேன். இந்தியாவில் எத்தனையோ சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. இன்றைக்கு எப்படி சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டோ. அதேபோல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் நூற்றாண்டு. தோன்றிய நாளில் என்ன வலிமையோடு இருந்ததோ, அதைவிட பன்மடங்கு வலிமை பெற்றுள்ளது. அவர்கள் தோன்றிய நாளில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்பு இயக்கங்கள், எதிர் அரசியல் இயக்கங்கள்  தோன்றி இருக்கின்றன. ஆனால் எல்லாம் அடையாளம் இழந்துவிட்டு போய்விட்டன. ஒரே ஒரு இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வீழ்த்த முடியாத, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிற இயக்கமாக இருக்கிறது. அதுதான் சுயமரியாதை இயக்கம்.

மோடி - அமித்ஷா

ஏன் சுயமரியாதை இயக்கத்தின் விழாவை கொண்டாட வேண்டும். ஏன் இந்த தலைமுறைக்கு ஏன் சொல்லித்தர வேண்டும். இன்றைக்கு பகல் பொழுதில் இதே கோவையில் நம்முடைய இளைய தலைமுறை என்ன பாடு பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அது மிக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பாஜக கொண்டுவந்த சட்டங்கள் எதையும் கேள்விக்கு உள்ளாக்க முடியவில்லை. எதையும் முறியடிக்க முடியவில்லை. நினைத்ததை எல்லாம் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தார்கள். ராமர் கோவிலை கட்டிவிட்டார்கள். 370வது சட்டப்பிரிவை நீக்கிவிட்டார்கள். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிற சட்டத்தை கொண்டுவந்து விட்டார்கள். நீட் என்கிற நுழைவுத்தேர்வை கொண்டுவந்து திணித்து விட்டார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எந்த சட்ட நியாயங்களும் கிடையாது.

அப்போது மோடி செய்கிறார்.  பாஜக செய்கிறது. நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மோடியை வீழ்த்த முடியவில்லை. பாஜகவை வீழ்த்த முடியவில்லை. இதுதான் உண்மை. மக்கள் மன்றத்திலும் வீழ்த்த முடியவில்லை. பெரிய அணி சேர்க்கை செய்து பாஜகவை வீழ்த்தி விடலாம் என்று இந்தியா கூட்டணி எல்லாம் கட்டமைத்து பார்த்தோம். செல்ஃப் எடுக்கவில்லை. அது சேர்ந்த வேகத்திலேயே பிரிந்து சென்றுவிட்டது. இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும் பாஜகவை எதிர்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத்திலும் எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக்குகிறார்கள். நீதிமன்றத்திலும் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதுதான் அகில இந்திய நிலைமையாகும். ஆனால் இந்த மூன்று மன்றங்களிலும் பாஜகவை வீழ்த்தியிருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு.

2014ல் மோடி முதல்முறை பிரதமரானார்… தமிழ்நாட்டில் பாஜக தோற்கடிக்கப் பட்டது. அப்போது கன்னியாகுமரியில் மட்டும் வெற்றி பெற்றது. 2019ல் முற்று முழுதாக பாஜகவுக்கு ஒரு இடம் கூட இல்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டது. 2024லும் அதே நிலை தொடர்ந்தது. மூன்று முறை பிரதமராகி இருக்கிறார், தமிழ் நாட்டின் பங்கே அதில் கிடையாது என்று பெருமையாக சொல்லலாம். இந்தியாவில் இப்படி ஒரு மாநிலத்தை காட்ட முடியவில்லையே. அரசியல் ரீதியிலும், மக்கள் மன்றத்திலும் வீழ்த்திக் காட்டியிருக்கிறோம். இன்றைக்கு நாடாளுமன்றமும், சட்டமன்றமும் சம அதிகாரம் பெற்றவை என்று சட்டமும் சொல்கிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் பல விஷயங்களில் உறுதிபடுத்தி விட்டார்கள். நாடாளுமன்றத்தில் நம்மால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்திற்கு நிகரான சம அதிகாரம் பெற்ற சட்டமன்றத்தில் மோடி கொண்டுவருகிற ஒவ்வொரு சட்டத்தையும் உரசிப் பார்த்து, அதற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டமன்றம் தன்னுடைய தனித்தன்மையை ஒவ்வொரு நாளும் நிருபித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இணையாக இன்னொரு சட்டமன்றத்தை இந்தியாவில் காட்ட முடியாது.

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்பது அண்ணா காலத்தில் இருந்து நம்முடைய முழக்கமாக உள்ளது. நாம் இன்னும் அது நம்முடைய இலக்குதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 10 மசோதாக்களுக்கு ஆளுநருடைய கையெழுத்து இல்லாமல் ஒப்புதல் பெற்றுவிட்டோம். 10 மசோதக்களில் ஆளுநர் பதவி ஒழிக்கப்பட்டு விட்டது. இது எவ்வளவு பெரிய சாதனை. எத்தனையோ மாநிலங்கள் ஆளுநர்களின் அடாவடித் தனத்தை எதிர்த்து, நீதிமன்றங்களுக்கு போனார்கள். நீதிமன்றங்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்த சொன்னார்களே தவிர, தமிழ்நாட்டு வழக்கில் தந்திருப்பதை போன்ற ஒரு தீர்ப்பை இந்தியாவில் எந்த மாநில அரசாலும் பெற முடிய வில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. அவர்களுக்கே அது மிகப் பெரிய ஒரு எச்சரிக்கையாகி போய்விட்டது. நமக்கே பெரிய சர்ப்ரைஸ் ஆகிவிட்டது. உச்ச நீதிமன்றம் தானா? உண்மையிலேயே ஆளுநர் வழக்கில் இப்படித்தான் தீர்ப்பை எழுதி இருக்கிறதா? என்று நாமே நம்மை கிள்ளிப் பார்க்கும் அளவுக்கு நம்ப முடியாத அளவுக்கு ஒரு தீர்ப்பு.

ஏன்? அவ்வளவு எளிதில் தந்து விடுவார்கள். ஏனென்றால் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு அரசு சட்டத்தை மீறவில்லை. நம்முடைய முதலமைச்சருக்கு தனியே ஒரு பாராட்டு விழாவை நடத்த வேண்டும். மிகமிக நுட்பமாக இந்த பிரச்சினையை கையாண்டார்கள். ஆளுநர் விஷயத்தில், அவருக்கான மரியாதை விஷயத்தில், கொடுக்க வேண்டிய கண்ணிய விஷயத்தில் எந்த குறையையும் தமிழ்நாடு வைக்கவில்லை. ரொம்ப தெளிவாக அதை சரியாக செய்துவிட்டு, இந்த பக்கம் வலையை விரித்து வைத்துள்ளார் முதலமைச்சர். அதனை சிவப்புக் கம்பலம் என்று நினைத்துக்கொண்டு ஆளுநர் வந்துவிட்டார். அது மிகப்பெரிய வலை என்று அவருக்கு தெரியவில்லை. வந்து சரியாக சிக்கிவிட்டார்.

தீர்ப்பு வந்த அன்றைக்கு சட்டமன்றத்தில் நான் இருந்தேன். முதலமைச்சருக்கு தகவல் வருகிறது. அவருடைய உடல்மொழியை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து போய் விட்டோம். செயல் வடிவத்தில் இந்த அளவுக்கு ஒரு பதிலடியை கொடுத்த ஒரு முதலமைச்சரை பார்க்கவே முடியாது. அவர் அவ்வளவு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார். ஏன் என்றால் உளப்பூர்வமாக அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு, பயணிக்கிறார் என்பதற்கு அந்த உடல்மொழியே சாட்சியாகும். அதனால் தான் இவ்வளவு துணிந்து பதிலடி கொடுக்க முடிகிறது. இன்றைக்கு பாஜக என்கிற அசைக்க முடியாத சக்தியை தமிழ்நாடு வீழ்த்துகிறது. இங்கே கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் உணர்வு இருக்கிறது.

ஆளுநர் இந்த தீர்ப்புக்கு பின்னரும் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். சரி பல்கலைக்கழங்களின் வேந்தர் அவர் தானே. கூப்பிட்டதால் சிலர் போயிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் மானமும், துணிவும் கொண்ட துணைவேந்தர்கள் ஒருவர் கூட அந்த மாநாட்டிற்கு செல்லாமல், ஆளுநர் பதவி என்பது அவரது அதிகாரம் என்பது ஒன்றுமே இல்லை. நமது முதலமைச்சர் சொன்னது போல அது வெறும் போஸ்ட் மேன் வேலைதான் என்று துணை வேந்தர்களே உணர்த்திவிட்டார்கள். போஸ்ட் மேன்தானே அப்புறம் ஏன் ராஜ்பவனுக்கு ஏன் போனீர்கள் என்று தமிழிசை கேட்டார்கள். கடிதம் கொடுக்கத்தான் போனோம். வேறு எதற்கு போனாம். இப்படி மிகத் தெளிவாக ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்நாடு வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் வெளிப்படும். அதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம். அதற்கு காரணம் தந்தை பெரியார். எனவே அந்த சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ