தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேட்டு வைக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் கருத்து தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிரருப்பதாவது:- 2026-இல் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா, சொல்லி இருந்த நிலையில், அண்ணாலை ஒரு படி மேலே சென்று பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பொம்மை முதலமைச்சராக இருந்தார். 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டங்கள், முத்தலாக் தடை சட்டம் போன்ற எத்தனையோ கருப்பு சட்டங்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுக ஆதரவளித்தது.
அதிமுகவின் ஆதரவில் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாஜக, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று பகிரங்கமாக சொல்லுகிற அளவுக்கு அதிமுக ஏன் பலவீனப்பட்டது. இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், அந்த கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். அல்லது பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு, அவர்களுடைய தலைமையின் கீழ் தனியாக கூட்டணி அமைத்தால் அப்படி சொல்லலாம். அதிமுகவின் சித்தாந்தமும், பாஜகவின் சித்தாந்தமும் ஒன்றா? வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட இரட்டை மாடுகளை வண்டியில் பூட்டினால், அந்த மாடுகள் வெவ்வேறு பக்கம் சென்று, அதிமுக என்கிற வண்டி குடை சாய்ந்துவிடும்.
திமுகவை வீழ்த்துவது என்கிற புள்ளியில் அதிமுக – பாஜக ஒன்றிணைந்து உள்ளதாக சொல்கிறார்கள். திமுகவை விட சிறந்த கோட்பாடுகளையோ, திமுகவை விட அதிகம் செயல்படக் கூடிய கட்டமைப்புகளையோ கொண்டிருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். நயினார் நாகேந்திரன், கூட்டணி ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமியை பொம்மை முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நயினார் சொல்கிறார். கடந்த காலங்களில் அப்படி தான் நடைபெற்றது. கூட்டணி ஆட்சி அமைவது எந்த விதத்திலும் அதிமுகவுக்கு சாதகமானது அல்ல. தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் அதிமுகவுக்கு கிளை உள்ளது. ஆனால் பாஜகவுக்கு அப்படி கிடையாது.
அண்ணாமலை, தன்னை பாஜக மாநில தலைவர் நீக்கியதற்கு காரணமாக இருந்த அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்தியதற்கு ரகசியமாக ஒரு சதித் திட்டம் தீட்டியுள்ளாரா? என்கிற சந்தேகம் எழுகிறது. பாஜக ஆட்சி அமைப்பதற்கு சாத்தியமே கிடையாது. அதிமுகவின் தயவால்தான் பாஜகவிடம் 4 எம்எல்ஏ-க்களாவது உள்ளனர். நயினார் நாகேந்திரன், பாஜக வேட்பாளராக மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடியவரா? தனித்து வெற்றி பெறுவதற்கான எந்த செல்வாக்கு ஆவது பாஜகவிடம் உள்ளதா? ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சாரமாக செய்யும் பாஜக, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக உடன் கூட்டணி வைக்கலாமா? மணல் மாஃபியாக்களிடம் அண்ணாமலை கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் என்று பாஜகவினரே குற்றம்சாட்டியுள்ளனர். ரவுடிகளை கட்சியில் சேர்த்தார் என்பது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகும். மாநில தலைவர் பதவி போய்விட்டது. தற்போது அதிமுக – பாஜக கூட்டணியை கலைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கிறார். தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேட்டு வைக்கிறார்கள்.
கூட்டணி ஆட்சி என்பதை அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். விஜய் மாநாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதம் எழுந்தபோது செல்லூர் ராஜு, கூட்டணி ஆட்சியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று சொன்னார். அது அதிமுகவின் குரலாகும். இன்றைக்கு அமித்ஷாவின் கருத்துக்கு யாரும் பதில் அளிக்காமல், திருடனுக்கு தேள் கொட்டியது போல அமைதியாயக இருக்கிறார்கள். அப்படி செய்தால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் சிக்க நேரிடும். தேர்தல் ஆணையம் சின்னத்தை பறித்துவிடும். பாஜக அதிமுகவின் உள்விவகாரங்கள் மட்டுமின்றி அனைத்து விவகாரங்களிலும் தலையிடுவதுதான் இங்கே நடக்கும் கொடுமையாகும். ஓபிஎஸ், தினகரனை அதிமுகவில் சேர்க்க சொல்வதுதான் உட்கட்சி விவகாரம். ஆட்சி நாங்கள் தான் நடத்துவோம். எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுவார் என்று சொல்கிறார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி ஆளுமை அற்றவர். கட்சி, ஆட்சி நடத்துவதற்கு அவர் தகுதி அற்றவர் என்று சொல்வதாக தான் அர்த்தம்.
அண்ணாமலையை பாஜகவில் புறக்கணிக்கும் சூழல் தொடர்ந்தால், அவர் புதிய கட்சி தொடங்கும் சூழல் உருவாகும் என்று வலதுசாரிகள், அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்தாலும், தமிழ்நாட்டில் அவர்களால் தங்களின் கணக்கை தொடங்க முடியவில்லை. பாஜவை கொல்லைபுறமாக ஆட்சியை கைப்பற்றுவது அவர்களின் வழக்கமாக உள்ளது. ஜனநாயகத்தில் நேருக்கு நேராக எதையும் சந்திக்கிற திராணி கிடையாது. அவர்களின் வரலாறு முழுக்க கோழைத்தனங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவர்கள் வரலாறு முழுக்கவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தது கிடையாது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இந்துத்துவாவை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறார்களே தவிர அவர்கள் இந்துத்துவாவிற்கும் உண்மையானவர்கள் கிடையாது.
இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மையாக உள்ளதால், அதை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். வடநாட்டிற்கு சென்றால் ராமர், ஒடிசா சென்றால் பூரி ஜெகநாதர், தமிழ்நாட்டிற்கு வந்தால் முருகன் என அவர்கள் மாறி மாறி வேடம்போடுவார்கள். ஆனால் மண்டை மேல் இருக்கிற கொண்டையை அவர்கள் மறைக்க மறந்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் கொண்டை மட்டும்தான் தெரிகிறது. மண்டை தெரியவில்லை. அதனால் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வளர்ச்சி திட்டங்களை செய்வதற்காக தான் மக்கள் வாக்களிப்பார்களே தவிர அவர் நன்றாக சாமி கும்பிடுகிறாரா? கலவரம் செய்வாரா? என்று வடநாட்டில் உள்ள அரசியல் அறிவற்ற மூடர்களுக்கு வேண்டும் என்றால் பொருந்தலாம். தமிழ்நாட்டில் பக்தி என்பது வேறு. ஆனால் பெரியார் சிலை உடைத்தால் அவன் கோபப்படுகிறான். அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.