அதிமுகவிற்கு இருந்த சிறந்த வாய்ப்பு விஜயுடன் கூட்டணி அமைப்பதாகும். அதை எடப்பாடி தவறவிட்டபோதே ஏறத்தாழ வெற்றியையும் அவர் தவறவிட்டார் என்கிற விமர்சனம் தொண்டர்கள் மத்தியில் உள்ளதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கட்சிக்கார்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல், கட்சியினர் அவரை சந்திக்க ஆவலோடு இருக்கிறார்களா? என்று கேள்வி எழும். சில தலைவர்களுக்கு தான் அப்படி பட்ட வசீகரமும் ஈர்ப்பும் உண்டு. எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? என தெரியவில்லை. அவரை ஒரு மாவட்ட செயலாளரை பார்ப்பது போன்றுதான் பார்க்கிறார்கள். ஒரு தலைவனுக்கான அந்த வியப்பு அவரிடம் கிடையாது.
அவர் அரசியல் அரசியலில் எடுத்துவைத்த அடிகள் எல்லாம் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை. முதலமைச்சராக இருந்தபோது ஒரு சிறந்த ஆட்சிக்கான குறைந்தபட்ச மதிப்பை எடப்பாடி பழனிசாமி பெறவே இல்லை. சாத்தான்குளம் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், 3 வேளாண் சட்டங்கள், முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கருப்பு சட்டங்களுக்கு உடனிருந்து ஆதரவு அளித்தார். தனக்கு ஆளுமைப்பண்பு இல்லை என்பதை எடப்பாடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் நடைபயணத்தை நாங்களும் தொடங்கி வைக்கிறோம் என்று பாஜகவினர் வந்துள்ளனர்.
எடப்பாடி கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லாமல், கட்சியில் மோசமான முடிவுகளை எடுப்பதாக அதிமுகவினரே குற்றம் சாட்டுகிறார்கள். அன்வர் ராஜா, அதிமுக இந்த தேர்தலோடு அழிந்து போய்விடக்கூடாது என்று சொல்கிறார். அவரை போன்றவர்கள், இந்த தேர்தலில் பாஜக நமது கட்சியை விழுங்கிவிடும் என்கிற மிகுந்த அச்சத்தோடு இருக்கிறார்கள். அதிமுகவில் இருந்து முதலமைச்சர் வருவார் என்று சொல்வதன் மூலம் வேலுமணியை சொல்கிறாரா? செங்கோட்டையனை சொல்கிறாரா? என்று இது ஒரு விலாசம் இல்லாத கடிதம் போன்று அலைந்துகொண்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ள போதும், அவர் ஒரு பணிவான பாணியில் தான் சொல்கிறார்.
எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்குகிறபோது கலைஞரை விட நான் சிறந்த தலைமை என்றுதான் மக்களிடம் அறிமுகமாகிறார். ஜெயலலிதா தொடக்க காலத்தில் சில அரசியல் பிழைகளை செய்தார். பின்னர் அந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு தன்னை ஒரு ஆளுமையாக திரும்ப நிரூபித்தார். தன்னுடைய அரசியல் தவறுகளை எல்லாவற்றையும் ஒரு படிகட்டுகளாக பயன்படுத்தி மேலே ஏறி வந்து, சமூநீதி காத்த வீராங்கனை என்கிற நற்பெயரை பெற்றார்.
தன்னை எதிர்த்தவர்கள் எல்லோரையும் வீழ்த்தி ஒற்றை ஆளுமை நான்தான் என்று ஜெயலலிதா நிரூபித்தார். அதுபோன்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆளுமை பண்பை நிரூபித்தாரா? என்றால் இல்லை. ஓபிஎஸ் உடனான பகையை அவரால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. தினகரனை அவரால் தன்வயப் படுத்திக்கொள்ள முடியவில்லை. சசிகலா உடன் குறைந்தபட்ச சமரச திட்டத்திற்குள் அவரால் போக முடியாது. பகையாளியான பாஜகவிடம் சென்று சரணடைகிறார். ஆனால் தன் கட்சியினரோடு எதாவது சமரசத்திற்கு வந்தாரா? எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதலமைச்சர் ஆகி, தற்போதும் கொல்லைப்புற அரசியலிலே இருக்கிறார். இன்னும் அவர் தலைவாசலுக்கே வரவில்லை.
அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றது. கூட்டணி ஆட்சி என்பதற்கு விளக்கம் அளித்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முன்னுக்குப்பின் முரணான விஷயங்களை அவர் பேசி கொண்டிருக்கிறார். பாஜகவினர் இல்லாமல் நடைபயணம் சென்றால் கூட, கட்சியினர் உற்சாகம் அடைவார்கள். இந்த நடைபயணத்திற்கு பாஜக செல்ல வேண்டிய அவசியம் என்பது கிடையாது. அதிமுகவுக்கு இருந்த மிகப்பெரிய வாய்ப்பு விஜயோடு கூட்டணி செல்வது மட்டும்தான். அந்த வாய்ப்பை தவறவிட்டபோது, எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ வெற்றியையே தவறவிட்டுவிட்டார் என்கிற விமர்சனம் அவரது தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
அன்வர் ராஜா துணிச்சலாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அது கட்சிக்கும் கூட்டணிக்கும் எதிரானது என்று தெரிந்துதானே வெளியிட்டுள்ளார். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தபோது கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். அதிமுக தனது தனித் தன்மையை இழந்துவிட்டதால் திருமாவளவன் போன்ற மாற்று சக்திகள், அதிமுகவை கூட்டணிக்கான வாய்ப்பாக நினைத்து பார்க்கவே முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமை வகிப்பது இயல்பானது. ஆனால் மாநில தேர்தலில் பாஜக தலைமை வகிப்பது இயல்பானது அல்ல. அதிமுகவின் அழிவுகாலம் தொடங்கி விட்டதற்கான அடையாளமாக தான் அதை பார்க்க வேண்டும். பாஜகவின் ராம சீனிவாசன், பாஜக முதலில் கட்சியுடன் கூட்டணி வைத்து, பின்னர் அவர்களையே அழித்து முதன்மை சக்தியாக மாறிவிடுவோம் என்று சொல்கிறார். இதை கேட்டு அன்வர் ராஜாவை தவிர வேறு யாருக்கும் கோபம் வரவில்லை. முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியாரை அவமதிப்பு செய்தபோது கூட அதிமுகவினர் பெரிய அளவில் எதிர்ப்பை வெளிக்காட்டவில்லை.
திமுக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டம் மூலம் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. திமுகவை வீழ்த்துவதற்கான அரசியல் ஆயுதம் எதுவும் அதிமுக – பாஜவிடம் இல்லை. திமுகவைவிட ஒரு சிறந்த ஆட்சியை தந்தோம் என்று அதிமுகவால் சொல்ல முடியவில்லை. திமுகவை விட தங்களது ஆட்சி சிறந்தது என்று பாஜகவாலும் சொல்ல முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு எந்த நல்லதும் செய்யாததன் மூலமாக அந்த கட்சிக்கு எந்த அங்கீகாரமும் தமிழ்நாட்டில் கிடையாது. நயினார் நாகேந்திரன் தான் சொல்வதை கட்சியினர் கேட்கவில்லை என்று சொல்கிறார். அதற்கு பின்னால் அண்ணாமலை இருக்கிறார் என்று அவரால் சொல்ல முடியவில்லை. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்தால் அவர் தனிக்கட்சி தொடங்கிவிடுவார். அண்ணாமலை ஒட்டுமொத்த பாஜக என்பது நான்தான் என்று நினைக்கிறார். அதனால் ஆக்டிவ் தலைவராக அண்ணாமலை உள்ளார். தான் தலைமை வகிக்காத எதுவும் வெற்றி பெறாது என்று அண்ணாமலை நிரூபிக்க நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.