தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக் கூடிய கூட்டணியாக ,அதிமுக – பாஜக கூட்டணி உள்ளதாகவும், அந்த துரேகாத்தை நியாயப்படுத்தும் வாய்தான் இன்றைக்கு பாஜக – அதிமுக இயல்பான கூட்டணி என்று சொல்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப் பயணத்தை கோவையில் தொடங்கியுள்ளார். எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்தில் இருந்து சுற்று பயணத்தை தொடங்காமல் எதற்காக கோவையில் தொடங்கினார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கரைந்து கொண்டிருக்கிற அதிமுகவின் வாக்குகளை யார் கைப்பற்றுவது என்பதில் போட்டி நிலவுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை வட்டாரத்தில் இருந்துதான் தேர்வு செய்யப்பட்டார்கள்.
எடப்பாடியின் பிரச்சினை என்ன என்றால் நாம் முதலமைச்சர் ஆகிறமோ, இல்லையோ. ஏற்கனவே நாம் செல்வாக்குடன் இருக்கும் இடங்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். எதற்காக அங்கு கவனம் செலுத்துகிறார் என்றால், அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று அமித்ஷா சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஒத்துவராவிட்டால் அதிமுகவில் இருந்து செங்காட்டையன், வேலுமணி போன்றவர்களை முதலமைச்சர் ஆக்குவேன் என்று சொல்கிறார். எடப்பாடி கடைசி நேரத்தில் கூட்டணியை உடைத்துவிட்டு, விஜய் உடன் போய் விடுவாரோ என்கிற பயம் பாஜகவிடம் உள்ளது. இப்படி உள்ளபோது தனக்கு சாதகமாக உள்ள கோவை பகுதியை தக்கவைக்க முயற்சிக்கிறார்.
வடதமிழகம், தென்தமிழகத்தில் அதிமுக செயல்பாடு குறைவாகவே உள்ளது. இந்த இடங்களில் அதிமுகவை கரைத்துவிட்டு அந்த வாக்கு வங்கியை நாம் வாங்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மேட்டுப்பாளையம் தொடங்கி பட்டுக்கோட்டை வரை எடப்பாடி செல்லக்கூடிய இந்த தமிழகம் காப்போம் சுற்றுப் பயணம் மூலம், அவர் அதிமுகவில் முதல்வர் ரேசுக்கு வேறு யாரும் வராமல் பார்த்துக் கொள்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மறுப்பது உள்ளிட்ட ஏராளமான துரோகங்களை மத்திய அரசு செய்திருக்கிறது. இது குறித்து எல்லாம் பேசாமல் நீங்கள் எந்த தமிழகத்தை காக்கப் போகிறீர்கள். அதிமுக – பாஜக கூட்டணி ஒரு இயல்பான கூட்டணி என்று எடப்பாடி சொல்கிறார். முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டித்து உள்ளாரா? அப்போது அதிமுகவை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விஜய் தனித்து போட்டியிடுவேன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்வது ஏன் என்றால்? அதிமுகவின் வாக்கு வங்கியை கவரும் போட்டியில் பாஜகவை போன்று விஜயும் இருக்கிறார்.
அதிமுக எங்கெல்லாம் வலுவில்லாமல் இருக்கிறது என்பது நாடாளுமன்றத் தேர்தலின் போது தெரிந்துவிட்டது. முருகன் மாநாடு நடத்தியதன் மூலம் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை அறுவடை செய்து அங்கு வெற்றி பெற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. கோவை வட்டாரத்தை போல, தென் தமிழகத்திலும் கணிசமான எம்எல்ஏ-க்களை பெற்றுவிட்டால் ரேசில் அதிமுகவை முந்தி விடலாம் என்று பாஜக நினைக்கிறது. பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவுக்கு நஷ்டம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். போன ஆட்சியில் சேர்த்துவைத்த கோடி கோடியான பணம் உள்ளது. பிறகு அமலாக்கத் துறை சோதனைகள். இவற்றில் இருந்து அமித்ஷாவின் கட்டளைகளுக்கு கட்டுப்படக் கூடிய நபராகவே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் எடப்பாடி மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. அதை சரிசெய்திடும் விதமாகவே இந்த பிரச்சாரத்தை எடப்பாடி மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து செப்டம்பரில் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். சீமானும் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது, பாஜக, விஜய், சீமான் ஆகிய மூன்று பேரும் அதிமுக வாக்குகளை கைப்பற்ற நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் இரு துருவ அரசியல் உள்ளது. அதிமுகவை காலி செய்துவிட்டு, அந்த இடத்திற்கு யார் வருவது? என்பது தான் போட்டியாக இருக்கிறது. இந்த போட்டியில் விஜய், பாஜக ஆகியோர் முன்னணியில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வாக்குகளை யாரும் அபகரித்துவிடாமல் இருக்க முயற்சித்து வருகிறார்.
3 வேளாண் சட்டங்கள், சிஏஏ, என்.ஆர்.சி போன்ற ஆர்எஸ்எஸ் அஜெண்டாக்கள் சட்டமாக வருகிறபோது ஆதரித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதனால் எடப்பாடி பழனிசாமி, திமுக பூச்சாண்டி காட்டுகிறது என்று சொல்வதன் பொருள் என்ன என்றால்? அவற்றுக்கு எல்லாம் காண்மூடித்தனமான ஆதரவு வழங்க தயார் என்பது தான். அவருடைய கவனம் எல்லாம் தமிழ்நாட்டில் அதிமுகவை ஒரு கட்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னம் நமக்கு உறுதியாக வர வேண்டும். அதற்காக அமித்ஷா சொல்கிறபடி நடக்க வேண்டும். அதன் முதல்படி தான் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, இது தமிழ்நாடு முழுவதும் நடக்கும். அப்போது தமிழ்நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகளை பற்றி கேட்காமல், ஒன்றிய அரசு, மாநில அரசு என்ற ஒன்று இருக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்ட போது, எடப்பாடி மக்களிடம் என்ன பிரச்சாரம் செய்வார்?.
மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தான் பேச எடப்பாடி பேச முடியுமே தவிர, கொள்கை அடிப்படையிலான பிரச்சராத்தை மேற்கொள்ள முடியாது. அப்போது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய கூட்டணியாக, அதிமுக – பாஜக கூட்டணி இருக்கிறது. அந்த துரேகாத்தை நியாயப்படுத்தும் வாய்தான் இன்றைக்கு பாஜக – அதிமுக இயல்பான கூட்டணி என்று சொல்கிறது. அப்போது பாஜக செய்கிற அத்தனை குற்றங்களையும் ஒப்புக்கொண்டு நியாயப்படுத்துகிறீர்கள். இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காசுகொடுத்து மக்கள் கூட்டத்தை காண்பிக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி மக்களால் புறக்கணிக்கப்படுவார்.
திமுக ஒன்றிய அரசின் செயல்பாடுகளை வைத்து, அவர்களை ஒரு பலமான வில்லனாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்கிறார்கள். அது கண்டிப்பாக எடுபடும். ஏனென்றால் அனைத்து விஷயங்களிலும் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது மத்திய அரசுதான். ஆனால் அதிமுக, பாஜக, விஜய், சீமான் போன்றவர்களுக்கு பலவீமான வில்லனாக தான் திமுகவை காட்ட முடியும். உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு என்ன பிரச்சினை, என்ன பாதிப்பு என்பதை ஒருபோதும் அவர்கள் பேச முடியாது. விஜய் தனித்து போட்டியிடுவேன் என்று சொன்னதும் எடப்பாடி, நயினார் நாகேந்திரனுக்கு தூக்கம் போய்விட்டது. திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வேன் என்று சென்னை விஜய், எப்படியாவது அதிமுக – பாஜக கூட்டணிக்கு வருவார் என்று நினைத்தனர். விஜய் ஒருபுறம் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னாலும், பாஜக மறுபுறம் அவரை ஒரு பாசக்கார பிள்ளையாக தான் பார்க்கிறது. விஜய் தனித்து போட்டியிடுவேன் என்று சொன்ன பிறகும் நயினார், திமுகவை வீழ்த்த எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அரசியலில் வெல்ல வேண்டும் என்றால் அவர்களிடம் வில்லன் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளிடம் வில்லன் இல்லை. ஆனால் திமுக, மத்திய அரசு என்கிற உண்மையான வில்லனை மக்களிடம் காட்டுகிறார்கள். அதனால் எடப்பாடியின் சுற்றுப் பயணம் மேட்டுப்பாளையத்தை தாண்டி எங்கே சென்றாலும் மக்களிடம் எடுபடாது. அத்திக்கடவு – அவினாசி பிரச்சினை உள்ளிட்ட உள்ளுர் பிரச்சினைகள் குறித்து தான் எடப்பாடி பேசுவார். பாஜக உடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது என்பது ஒரு தற்கொலை முயற்சியாகும். அதற்கு காரணம் அந்த முயற்சியினாலாவது தன்னை ஒரு முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வார்களா? என்பதுதான். பாஜகவினர் அவரின் தலையில் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, விஜய் எடப்பாடியை தள்ளிவிட்டு நாம் ஒரு ஹீரோவாக உள்ளே நுழையலாமா? என்று பார்க்கிறார். ஆனால் இந்த கணக்குகள் எல்லாம் தமிழக மக்களிடம் எடுபடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.