தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு பெரிமிதத்துடன் தெரிவித்தார்.
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை வழங்கும் விழா நடைப்பெற்றது.

மேலும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு கலந்துகொண்டு 762 மாணவ,மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள், கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ வேலு, திராவிட மாடல் ஆட்சியால்,அறநிலை துறையால்,தமிழ்நாட்டில் காவிகளுக்கு மரியாதை கிடைத்திருக்கின்றது. வடநாட்டு காவிகளுக்கு மரியாதை இல்லை என்றார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி கொளத்தூரின் பாதுகாவலனாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளார், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அது மட்டுமல்லாது;தனிமனித பொருளாதாரத்தையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயர்த்தியுள்ளார்.
புதுமைப் பெண் தமிழ் புதல்வன் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் கல்வி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரை, தமிழ் மொழி ஆன்மீகத்தின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது. பல புலவர்களும், ஆன்மீகவாதிகளும் தமிழ் மொழிக்கு தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர், ஆன்மீகத் தொண்டாற்ற சிறந்த மொழி தமிழ் மொழி தான், அந்த கடவுளுக்கும் தமிழ் தான் பிடிக்கும் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு,கோவி.செழியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்,சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி அழகன்,ஜோசப் சாமுவேல்,பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,மயிலம் பொம்ம புர ஆதீனம்,பட்டிமன்ற பேச்சாளர் சுகிசிவம்,கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.