சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தமது தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அன்றைய அரசின் அங்கமாக இருந்த பாமக வலியுறுத்தியது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவில் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று 24.10.2008 ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து வலியுறுத்தினேன்.அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் பா.ம.க. உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தின. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த அன்றைய மத்திய அரசு ஒப்புக்கொண்டதும். ஒரு கட்டத்தில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடாமல் இருந்ததும் அனைவரும் அறிந்த வரலாறு.

தில்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி மாநாட்டில் பேசும் போது காங்கிரஸ் மூத்த தலைவர் இராகுல் காந்தி தெரிவித்திருக்கும் இன்னொரு தகவல் மிகவும் முக்கியமானது. ‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததும் ஒரு நல்ல தவறு தான். அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், தெலுங்கானா மாநிலத்தில் இப்போது நடத்தப்படிருப்பது போன்ற சமூகத்தின் எக்ஸ்ரே பதிவைக் காட்டக்கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்க முடியாது” என்றும் இராகுல் காந்தி கூறியிருக்கிறார். தமிழகத்தின் கோணத்தில் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது.
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் இராகுல்காந்தி அவர்கள் கூறியுள்ள கருத்தின் பொருளாகும். இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பும் இதைத் தான் காட்டுகிறது.ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டு வரக்கூடியது; அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்து கொள்வார் என்பது தான் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். இராகுல்காந்தி அவர்கள் ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிடவேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன். விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, அவரது அமைச்சரவை சகாக்களோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்த எவருமோ பங்கேற்கலாம். வெகு விரைவில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். முதலமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.
ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…