40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

சென்ட்ரலில் இருந்து டெல்லி வரை செல்லும் 50 க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள், கொருக்குபேட்டை ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.
இதற்காக, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால், ‘பீக் ஹவர்ஸ்’களில் மாணவர்களும், பணிகளுக்கு செல்வோரும், இந்த ரயில்வே கேட் பகுதியை கடக்க முடியாமல், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அவசர மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸ் வந்து செல்வதில்கூட தாமதம் ஏற்பட்டது.தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதி ஒதுக்குவது பணியை தொடங்குவது மீண்டும் கிடப்பில் போடக்கூடிய நிலையில், 2022 ஆம் ஆண்டு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இறுதியாக போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றயை தினம் இந்த சுரங்கபாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சுரங்கபாதைக்கான கல்வெட்டை திறந்து வைத்த பின்னர் கண்ணன் ரவுண்டான பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சினிமாவில் நடிக்க உதவி கேட்ட இளைஞர்கள்…. விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?