கச்சத்தீவு விகாரம் குறித்து விஜய்க்கு புரிதல் இல்லாத நிலையில், சீமான் போன்றவர்கள் பேசுவதை பார்த்து, அவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அண்ணாமலை அளித்திருக்கும் பதிலடி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு தான் தாய்மாமன் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விஜய் எப்படி தாய்மாமன் ஆக முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அக்கா, தங்கை என்றால் இலவசமாக படத்திற்கு டிக்கெட் தருவாரா என்றும் கேட்டுள்ளார். அப்படி விஜய் படத்திற்கு இலவசமாக டிக்கெட் கொடுத்தால் அவருடைய நிலைய என்னவாகும்? சினிமாவில் கிடைக்கும் பணம் பத்தவில்லை என்பதால் தான் டெல்லி திட்டத்தின் பேரில் விஜய் அரசியலில் பணம் சம்பாதிக்க வந்துள்ளார். திரைப்படத்தில் விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோ. உண்மை வாழ்க்கையில் அவர் எப்படிபட்டவர் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அரசியல் வாழ்க்கையில், அவர் ஒரு காமெடியன். அவர் செய்து அனைத்தும் காமெடிதான்.
தவெக மாநாட்டில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். கச்சத்தீவு பற்றி அவருக்கு என்ன தெரியும். கச்சத்தீவு என்றால் என்ன என்று தெரியுமா? அதற்கும் தமிழக மீனவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்ன பிரச்சினை என்பதே விஜய்க்கு தெரியாது. சீமான் போன்றவர்கள் பேசுவதால் நாமும் அதை பேச வேண்டும் என்று சொல்லியுள்ளார். கச்சத்தீவு என்பது ஒரு ஏக்கர் பரப்பளவிலான மண்மேடு ஆகும். அதை வைத்து சீமான் அரசியல் செய்கிறார். அவரை பார்த்து காப்பி அடித்தால் இதுதான் பிரச்சினை. சீமான் சொல்வதே பாதி பொய். அதை காப்பி அடித்து பேசினால் அது பொய்தானே. சினிமாவில் வடிவேலுவும், அரசியலில் விஜயும் ஒன்றுதான். வடிவேலு உடன் போண்டா மணி போன்றவர்கள் இருப்பதை போல, விஜயுடன் சிலர் இருக்கிறார்கள்.
விஜய் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர். திரைத்துறையில் உள்ளவர்களுக்கு அது தெரியும். இனிமேல் மக்களுக்கும் அது தெரியும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரே மேடையில் வேட்பாளர்களை நிற்கவைத்து பேசுவார். அதேபோல் தவெக மாநாட்டில் விஜய் பேசுகிறபோது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியும், படித்தவர். அதிமுகவில் எம்.பி. ஆக இருந்தவர். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர். நீண்ட காலம் எம்ஜிஆர் உடன் பயணித்துள்ளார். ஆனால் விஜய்க்கு அப்படி எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. விஜய் பேசும்போது மேடையில் உள்ள சிலர் எழுந்து நின்று, மற்றவர்கள் உட்கார்ந்து இருந்தால் அவர்களுக்கு விஜய் பொறுப்பு வழங்க மாட்டார் என்கிற அச்சம் இருக்கலாம். அதன் காரணமாகவே எல்லோரும் எழுந்து நின்றனர். நடிகர் தாடி பாலாஜி, விஜயை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அவரை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அவரை விஜயை பார்க்கவிடவில்லை என்பதால் ஆத்திரத்தில் இந்த பதிவை போட்டிருக்கிறார். விஜயை சுற்றியிருப்பவர்கள், அவரை கட்டுப் படுத்துகிறார்கள் என்பது ஏற்கத்தக்கது அல்ல.
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் தெரிவித்துள்ளது குறித்து பேசிய அண்ணாமலை அரசியலில் இதெல்லாம் செய்வதுதான் கூறியுள்ளார். அது உண்மைதான். எடப்பாடி பழனிசாமி முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை அப்படிதான் சொல்வார்கள். பிரேமலதா, விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 50 தொகுதிகளை கணக்கெடுத்து வைத்துள்ளோம் என்று சொன்னார். ஆனால் கடைசியில் தொகுதிக்கு 1500 வாக்குகள் தான் கிடைத்தது. விஜய் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குகளை வாங்குவார். அனைத்து தொகுதிகளிலும் தானே நிற்பதான நினைத்து வாக்களிக்க வேண்டும் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் தலைவர்களுக்காக தான் மக்கள் வாக்களிப்பார்கள். வேட்பாளர்களை பார்க்க மாட்டார்கள். நெடுஞ்செழியன் அதிமுகவில் இருந்து பிரிந்துசென்று தனி அணியாக போட்டியிட்டார். ஆனால் தலைக்கு 1500 வாக்குகளை தான் வாங்கினர். இதுதான் தனிநபர்களின் நிலை. வாக்களிப்பது என்பது கட்சியின் தலைவருக்காகவும், சின்னத்திற்காகவும் தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.