தவெக மாநாட்டில் எம்ஜிஆரை தன்னுடைய அரசியல் வழிகாட்டியாக விஜய் கூறியுள்ளதன் மூலம் தன்னிடம் புதிதாக கொள்கைகள் எதுவும் இல்லை என்று விஜய் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டில் விஜயின் ஆற்றிய உரை தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் மாநாட்டில் 3 செய்திகளை தெரிவித்துள்ளார். அதில் 2 செய்திகள் பழசுதான். திமுக தங்களுடைய அரசியல் எதிரி என்பதை கூர்மைப்படுத்தி உள்ளார். பாஜக தங்களுடைய கொள்கை எதிரி என்றுசொல்லிவிட்டு, பிரச்சினைகளை சொல்லி சொல்லி கேள்வி கேட்பது போல பேசியுள்ளார். முதன்முறையாக பிரதமர் மோடியின் பெயரை சொல்லியுள்ளார். இவை இரண்டும் பழசு என்றாலும் தாக்குதலை அடுத்தக்கட்டத்திற்கு நோக்கி நகர்த்தி உள்ளார். மூன்றாவது புது விஷயம் நடிப்பிலும், அரசியலிலும் தனக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர் என்று விஜய் சொல்கிறார். இது புதிய வார்த்தை. முதன் முறையாக வருகிறது. மாநாட்டிற்கு முதல் நாளில் கட்அவுட்டில் ஒருபுறம் அண்ணா, மறுபுறம் எம்ஜிஆர். இருவருக்கும் நடுவில் விஜய் இருந்தார். அப்போதே தெரிந்துவிட்டது ஏதோ செய்யப் போகிறார் என்று. ஏனென்றால் புதிதாக அவரிடம் சொல்வதற்கு கொள்கை இல்லை. அதை சொல்வதற்கு அவரே வெட்கப்படவில்லை.
எம்ஜிஆரை தன்னுடைய தலைவராக அறிவித்துவிட்டு இன்றைக்கு அந்த அதிமுக கொள்கையில் இருந்து தவறிவிட்டதாக சொல்கிறார். இன்றைக்கு அந்த கொள்கையை வழிநடத்த நான் தான் இருக்கிறேன் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்கிறார். அதிமுக தகுதி அற்றவர்கள் கையில் இருப்பதாக எடப்பாடியின் பெயரை சொல்லாமல் சொல்கிறார். ஊழல் செய்த எடப்பாடி தன்னையும், கட்சியையும் காப்பாற்றிக்கொள்ள பாஜக உடன் கூட்டணி வைக்கிறார் என்கிற விமர்சனத்தை மறைமுகமாக வைத்தார். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் இன்றைக்கு வேதனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு 2026ல் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியும் என்று விஜய் சொல்கிறார். அதன் மூலம் தன்னை ஆதரியுங்கள் என்கிற கோரிக்கையை மறைமுகமாக போட்டு உடைத்துள்ளார். இவ்வளவு நாட்களாக விஜய் ஏன் அதிமுகவை விமர்சித்து பேசவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தோம். தற்போது அதிமுகவை விமர்சிக்க தொடங்கியுள்ளார். அடுத்து என்ன என்று பார்க்க வேண்டும்.
வேதனையில் இருந்தபோதும் எடப்பாடியை ஏற்றுக் கொண்டவர்கள் அதிமுக தொண்டர்கள்தான். இதில் நாம் கவனிக்க வேண்டியது விஜய், அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி உஷாராக வேண்டும். நீங்கள் வலிமையுடன் இருக்கிறபோது உங்களை எதிராலி சீண்ட மாட்டான். நீங்கள் பலவீனமாக இருந்தால், எப்படி நடத்துவார்கள் என்பதற்கு கூட்டணி அறிவிப்பே ஒரு சான்றாகும். அதிமுக போன்ற ஒரு மிகப்பெரிய இயக்கத்தை நடத்துகிற விதம் சரியானது அல்ல. இன்றைக்கு கட்சி பிரிந்து கிடக்கிறது. எல்லோரும் பங்கு போட வரத்தான் செய்வார்கள். இதற்கு மேலும் ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை சேர்த்துக் கொள்ளாவிட்டால் இன்னொரு தோல்வியை தவிர்க்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவினர் அதிமுக தொண்டர்களுக்கு வலை விரித்தார்கள். அதிமுககாரர்கள் அசரவில்லை. அப்போது விஜயிடம் அசந்துவிடுவார்களா? என கேள்வி எழும். ஆனால் விஜயின் மதுரை மாநாட்டிற்கு வந்தவர்களில் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களும் இருக்கலாம் அல்லவா? விஜய் கூப்பிட்டால் 10 சதவீதமாவது யோசிப்பார்கள் என்கிற ஆபத்து இருக்கிறது. 100 பேரில் 10 பேர் போனாலும் அது அதிமுகவுக்கு இழப்புதான். இதை எடப்பாடி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவெக மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு எச்சரிக்கை தான். அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறபோது, அவர் எடுத்த முயற்சிகளில் பாதி அளவுக்கும் மட்டுமே எடுத்து இவ்வளவு கூட்டம் விஜய் கூடுகிறது என்றால் ஏன்? என்று அவர் யோசிக்க வேண்டும். ஒரு தலைவராக அவர் இதை யோசிப்பார் என்று நம்புகிறேன். நாடறிந்த ஒரு பிரபலம் அரசியலுக்கு வருகிறார்கள் என்றால் எல்லோருக்கும் சேதாரம் இருக்கும். இளைஞர்கள் விஜயை நோக்கி செல்கிறபோது, இளைஞர் பட்டாளத்தை வைத்துள்ள சீமான், திருமா, அண்ணாமலை போன்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். இளைஞர்களின் வடிவமாக உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கி உள்ளோம் என்று சொன்ன பிறகு, அங்கேயும் இளைஞர்கள் சேர்கிறார்கள். அங்கேயும் சேதாரம் இருக்கும். இளைஞர் -இளம்பெண்கள் பாசறை வைத்துள்ள அதிமுகவுக்கும்தான் சேதாரம். 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். அதிகபட்சம் வெளியில் இருந்து 50 பிரபலங்கள் சேரலாம். மற்றவர்கள் எல்லாம் புதிய முகங்களாக தான் இருப்பார்கள். ஒரு வளர்கிற கட்சிக்கு அது மிகப்பெரிய பலவீனம். அந்த பலவீனத்தை விஜய் ஒப்புக் கொண்டிருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.