அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடிக்க அண்ணாமலை செய்த சதிகள் அமித் ஷாவுக்கு தெரிந்துவிட்டது. அவரது நடவடிக்கைக்கு பயந்து அண்ணாமலை எடப்பாடி தான் முதலமைச்சர் என்று பாஜக மேடையில் அறிவித்துள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜக பூத் கமிட்டி கூட்டத்திற்கு வந்த அமித் ஷா-வுக்கு, தமிழக நிர்வாகிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லையில் கூட்டம் நடத்துவதற்கு காரணம் குமரியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து விடலாம் என்ற கணக்கில்தான். ஆனால் பாஜகவினர் செலவு செய்யவில்லை. இதனால் கூட்டத்திற்கு ஆட்களே வரவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் நெல்லையில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை அழைத்துவந்துவிட்டார்.
கூட்டத்தில் முன்வரிசையில் வயதானர்கள் அமர்ந்திருப்பது தொடர்பான புகைப்படங்களே வந்துவிட்டன. இதனை கண்டு அமித்ஷா மிகவும் அதிருப்தி அடைந்துவிட்டார். பின்னர் நயினார் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, முருகன், தமிழிசை, ஹெச்.ராஜா போன்றவர்கள் வரவில்லை. நயினார், அண்ணாமலை ஆகியோர்தான் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன், அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டத்திற்கு யாரும் வராததால் அவர் கடும் அதிருப்திக்கு உள்ளாகினார்.
அமித்ஷா இந்த மாநாட்டிற்கு வரும்போது எடப்பாடியையும், ஓபிஎஸ்-யும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஓபிஎஸ் வழக்கம்போல் வரவில்லை என்று சொல்லி விட்டார். அமித்ஷா மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் போனில் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. ஆனால் கூட்டணியின் வெற்றியை தடுப்பது அண்ணாமலை தான். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை அவர் ஓரணியில் திரட்டி வைத்துள்ளார். இதற்கு ஜக்கி வாசுதேவ் உதவி வருகிறார்.
நீங்கள் கூட்டணி ஆட்சி என்று சொன்னதை வைத்து தான், அவர் கூட்டணி ஆட்சி என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதிமுக – பாஜக இடையே கூட்டணி இன்னும் ஒட்டவில்லை. இதை வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்வது எப்படி? இதற்கு ஒரே மாற்றுவழி எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அண்ணாமலை வாயால் அறிவிக்க வேண்டும் என்கிற திட்டத்தை எடப்பாடி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு, அமித்ஷா ரெண்டு ரெய்டு விட்டுள்ளார். அப்போது, உங்களை நீக்கிவிட்டு நயினாரை, பாஜக மாநில தலைவராக நியமித்ததால், அவர் முன்னெடுக்கும் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று வேலை பார்க்கிறீர்கள் என்று சொல்லியுள்ளார். மற்றொன்று திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக பேசுகிறீர்கள் என்று பேசியுள்ளார். உங்களை கட்சியை விட்டே நீக்கிவிடுவோம். உங்களுக்கு கட்சியில் தேசிய பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என எந்த பொறுப்பும் தராமல் இருப்பதற்கு காரணம், விட்டால் நீங்கள் தனிக்கட்சி தொடங்கிவிடுவீர்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் உங்களுக்கு எந்த பொறுப்பும் தராமல் வைத்துள்ளோம். தற்போது மேடையில் எடப்பாடி பழனிசாமி தான், முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
உடனே அண்ணாமலை மேடைக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்.டி.ஏ ஆட்சியை கொண்டுவருவது நம் எல்லோருடைய கடமை என்று சொன்னார். அத்துடன் நிற்காமல் ஓபிஎஸ், சசிகலா மற்றும் அதிமுகவில் தொடர்பில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் போன் செய்து, இனி இந்த ஆட்டத்திற்கு வரவில்லை. இதனை தொடர்ந்தால் அமித்ஷ தொலைத்துக்கட்டி விடுவார் என்று சொல்லியுள்ளார். இந்த தகவல்களை எல்லாம் பார்த்த பிறகுதான் அண்ணாமலையை தேநீர் விருந்துக்கு அமித்ஷா கையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.
அண்ணாமலை, நயினார் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள் எடப்பாடி தான் முதலமைச்சர் என்று. ஆனால் அமித்ஷா இதுவரை சொல்லவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலையை திட்டத்தை கைவிட சொன்ன அமித்ஷா, அதனை செய்வதற்கு நான் இருக்கிறேன் என்று அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளார். பாஜக 18 சதவீதம், அதிமுகவிடம் 20 சதவீதம் வாக்குகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு என்று வருகிறபோது இருவரும் 50 சதவீத இடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. அதன்படி, 117 இடங்களை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் அதில் தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு தந்துவிடுவதாக அமித்ஷா சொல்கிறார்.
எடப்பாடி, பாஜக 40 இடங்கள் கேட்கும். 22 இடங்களை கொடுத்து அவர்களை சரிகட்டிவிடலாம் என்று நினைத்தார். மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, பெரும்பான்மை இடங்களில் அதிமுக போட்டியிடும் என்று நினைத்திருந்தார். ஆனால், அமித்ஷாவை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு தலைமை கிடையாது. கூட்டணியில் ஆளுக்கு பாதி பாதி இடங்கள். எங்களுக்கு கொடுக்கும் இடங்களில் நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துக்கொள்கிறோம் என்று சொல்கிறார். அதன்படி, ஓபிஎஸ், சசிகலா, பாமகவில் அன்புமணி அணி ஆகியோருக்கு இடம் தரப் போகிறது. இதைதான் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைகிறது என்று அமித்ஷா சொல்லக்கூடிய வார்த்தையின் அர்த்தமாகும். இம்முறை 100 இடங்கள் குறையாமல் அமித்ஷா சமாதானம் ஆகமாட்டார்.
எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 100 இடங்கள் தராமல் இருப்பதற்கு ஒரே வழி விஜயுடன் கூட்டணிக்கு செல்வது தான். காரணம் விஜய் தன்னை எந்த இடத்திலும் அதிமுக எதிர்ப்பாளர் என்று சொன்னது கிடையாது. அவர் திமுகவை தான் எதிர்க்கிறார். தான் பாஜகவால் உருவாக்கப்பட்ட நபர் என்கிற குற்றச்சாட்டை மறைக்க பாஜக கொள்கை எதிரி என்று சொல்லி வருகிறார். அமித்ஷா 100 இடங்களை கேட்டால் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக கூட்டணியில் இருந்து வெளியேறுவார். அப்படி வெளியேறினார் என்றால்? அமித்ஷா அதிமுகவை இரண்டாக உடைப்பார். அதிமுக தலைவர்கள் பலருடன் பாஜக தொடர்பில் உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகள் காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாஜகவுக்கு செல்ல வேண்டும். பாஜகவுக்கு திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். இந்த முறை ஓபிஎஸ், அதிமுகவுக்குள் வந்துவிடுவார். சசிகலா, தினகரன் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.