இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது. கனடா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இரிடியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகள் மற்றும் வண்டல் படிமங்களில் இவை கிடைக்கிறது.
பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட 2 அல்லது 3 மடங்கு இதன் விலை அதிகம். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் இரிடியத்தின் விலை என்பது நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டாலர்களாக உள்ளது. இரிடியம் பெயரை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என கூறி பல மோசடி கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் ரிசர்வ் வங்கி மூலம், ஒன்றிய அரசு இரிடியம் விற்பதாகவும், இதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஏமாற்றியதாக ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் கென்னடி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அடுத்தடுத்ததாக 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த போது தமிழ்நாடு முழுவதும் சிண்டிகேட் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தரகர் போல செயல்பட்டு பலரும் இருடியம் மோசடி விவகாரத்தில் முதலீடு செய்யுமாறு கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து ஏமாற்றியது விசாரணையில் அம்பலமானது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த சிண்டிகேட் யார் இதில் தொடர்புடைய தரகர்கள் யார் யார் என்பது குறித்து கைது செய்யப்பட்ட 14 பேர் மூலமும் அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் புகார் அளித்த நபர்கள் ஆகியோர் உடன் நடத்தப்பட்ட விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பலரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் அதிரடியாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 இடங்களில் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் 12 புதிய வழக்குகள் இரிடியம் மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்டது.
இந்த புதிய 12 வழக்குகள் அடிப்படையில் அந்தந்த மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு தற்போது வரை 30 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம், டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சிகள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏமாந்தவர்கள் அனைவரிடமும் ஒரே பாணியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நடித்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். குறிப்பாக ரிசர்வ் வங்கியில் இரிடியம் விற்பனை செய்த விவகாரத்தில் உள்ள தொகையை வெளியில் எடுப்பதற்கு முதலீடுகள் தேவை எனவும் அவ்வாறு செய்தால் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி நம்ப வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் பணம் முதலீடு செய்பவர்களை நம்ப வைப்பதற்கு வெளிநாட்டிலிருந்து பலகோடி ரூபாய் பணம் வந்துள்ளது எனக் கூறியுள்ளனர். போலியாக ஆவணங்களை காட்டி, இந்த பணத்தை மொத்தமாக எடுத்தால் இந்திய அரசாங்கத்துக்கு வரி என்ற பெயரில் தெரிந்து விடும் எனக் கூறி நம்ப வைத்துள்ளனர். தங்களை RBI அதிகாரிகள் என நம்பவில்லை என்றால் எங்களுடன் RBI அலுவலகம் வரவும் என அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே சில மோசடிக்காரர்களை நிறுத்தி தங்களுக்கு வணக்கம் செலுத்தி பின் அவர்கள் மூலம் வெளிநாட்டு பணம் சிலவற்றை மாற்றி முதலீடு செய்பவர்களை நம்ப வைத்துள்ளனர்.
சென்னையில் மட்டுமல்லாது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அங்கிருக்கும் ரிசர்வ் வங்கி கிளைகளிலும் அழைத்துச் சென்று நாடகம் ஆடி ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு சிண்டிகேட் குழுவைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியலை தயாரித்து அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் 30 பேரை தமிழக முழுவதும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 12 வழக்குகளில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரிடிய மோசடி விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் அவரது மனைவிகள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சிண்டிகேட்டில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? இதில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? தரகர்களாக இருப்பது யார் என பல கட்ட அளவில் சிபிசிஐடி விசாரணை விரிவடைந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 30 பேர் மூலமாக நடைபெறும் விசாரணையில், மோசடி செய்த பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளார்கள்,சொத்துக்களாக குவித்துள்ளார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனையில் மேலும் பலர் சிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்களுடைய அடுத்த படம் ‘வாடிவாசல்’-ஆ? ‘STR 49’-ஆ? …. வெற்றிமாறன் சொன்ன பதில்!